டி-20 உலகக் கிண்ணத் தொடரின் போது மேற்கொள்ளப்பட்ட தீர்மானங்களில் ஏற்பட்ட சிறு தவறுகள் காரணமாக அரை இறுதிக்கு தகுதிபெற முடியாமல் போனதாக இலங்கை அணித் தலைவர் தசுன் ஷானக தெரிவித்துள்ளார்.
அபுதாபியில் நடைபெற்ற குழு 1 க்கான சுப்பர் 12 சுற்று கிரிக்கெட் போட்டியில் மேற்கிந்திய தீவுகளை 20 ஓட்டங்களால் வீழ்த்திய இலங்கை, ஆறுதல் வெற்றியுடன் டி-20 உலகக் கிண்ண கிரிக்கெட்டிலிருந்து வெளியேறியது.
இந்த நிலையில், போட்டியின் பின்னர் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்து கொண்டு இலங்கை அணித் தலைவர் கருத்து தெரிவிக்கையில்,
இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் ஒட்டுமொத்த ஆற்றல்கள் குறித்து திருப்தியடைகிறேன். அதேபோல, அணியில் உள்ள குறைபாடுகளை நிவர்த்தி செய்து கொண்டு, இளம் வீரர்களுக்கு உரிய ஆசோசனைகளை வழங்கி முன்னோக்கி நகர எதிர்பார்த்துள்ளோம்.
அதேநேரம், கடைசி நேரத்தில் அணியில் இணைத்துக் கொள்ளப்பட்ட பெத்தும் நிஸ்ஸங்க, முதலிரண்டு போட்டிகளில் விளையாடாமல் 3 ஆவது போட்டியிலிருந்து அணியில் சேர்க்கப்பட்ட சரித் அசலங்க ஆகிய இருவருக்கும் மஹேல ஜயவர்தன வழங்கிய ஆலோசனைகள் சிறந்த பலாபலனை கொடுத்தது.
இருவரும் மிகுந்த தன்னம்பிக்கையுடனும் விடாமுயற்சியுடனும் விளையாடினர். அவர்களிடம் திறமை உண்டு. அவர்கள் தங்களது பயிற்சிகளை நுட்பத்திறனுடன் செய்ததன் மூலம் அவர்கள் இருவரும் திறமையாக துடுப்பெடுத்தாடி ஓட்டங்களை குவித்தனர்.
மஹேல ஜயவர்தன போன்றவர்களின் ஆலோசனைகள் மூலம் அவர்களை இன்னும் திறமைசாலிகளாக ஆக்க முடியும். அவர்களுடன் வனிந்து ஹஸரங்க தனது அதிகபட்ச பங்களிப்பை வழங்கியிருந்தார். இந்த மூவரினதும் விடாமுயற்சி பாராட்டுக்குரியது.
அதேவேளை, எதிர்காலத்தில் தொடர்ச்சியாக பிரகாசிப்பதற்கு அவர்கள் மூவருக்கும் நாங்கள் ஒத்துழைப்புகளையும் உதவிகளையும் வழங்க வேண்டும் என தசுன் ஷானக தெரிவித்தார்.
இதேவேளை, டி-20 உலகக் கிண்ணத் தொடரில் முக்கிய போட்டிகளில் வைத்து எடுக்கப்பட்ட தீர்மானங்களில் ஏற்பட்ட சிறு தவறுகள் காரணமாக அரை இறுதிக்கு தகுதி பெற முடியாமல் போனது என்றும் அவர் குறிப்பிட்டார்.