July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: ஆப்கானிஸ்தானை வீழ்த்தி முதல் வெற்றியை பெற்றது இந்தியா

Photo: Twitter/ICC

ஆப்கானிஸ்தான் அணிக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் இந்திய அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றுள்ளது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் புதன்கிழமை இரவு நடைபெற்ற 33ஆவது லீக் போட்டியில் இந்தியா – ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற ஆப்கானிஸ்தான் அணியின் தலைவர் மொஹமட் நபி முதலில் பந்துவீச்சை தேர்வு செய்தார்.

இதனையடுத்து முதலில் துடுப்பெடுத்தாடிய இந்திய அணிக்கு கே.எல் ராகுல் 69 ஓட்டங்களையும், ரோகித் சர்மா 74 ஓட்டங்களையும் எடுத்து மிக சிறப்பான ஆரம்பம் கொடுத்தனர்.

இதன்பின் களமிறங்கிய அதிரடியாக விளையாடிய ரிஷப் பண்ட் 13 பந்துகளில் 27 ஓட்டங்களையும், ஹர்திக் பாண்டியா 13 பந்துகளில் 35 ஓட்டங்களையும் எடுத்ததன் மூலம் 20 ஓவர்கள் முடிவில் வெறும் 2 விக்கெட்டுகளை மட்டுமே இழந்த இந்திய அணி 210 ஓட்டங்களை எடுத்தது.

இதனையடுத்து களமிறங்கிய ஆப்கானிஸ்தான் அணிக்கு கரீம் ஜனத் 42 ஓட்டங்களையும், அணித்தலைவர் மொஹமட் நபி 35 ஓட்டங்களையும் எடுத்து கொடுத்தாலும், மற்ற வீரர்கள் இந்திய அணியின் பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் திணறியதால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட் இழப்பிற்கு 177 ஓட்டங்களை மட்டுமே எடுத்த ஆப்கானிஸ்தான் அணி 66 ஓட்டங்கள் வித்தியாசத்தில் தோல்வியைத் தழுவியது.

இந்திய அணி சார்பில் அதிகபட்சமாக மொஹமட் ஷமி 3 விக்கெட்டுக்களையும், ரவிச்சந்திர அஸ்வின் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம் இந்திய அணி, நடப்பு டி-20 உலகக் கிண்ணத் தொடருக்கான புள்ளிப் பட்டியலில் 5ஆவது இடத்தில இருந்து 4ஆவது இடத்திற்கு முன்னேறியுள்ளது.

இதேவேளை, இந்திய அணி, தமது அடுத்த போட்டியில் ஸ்கொட்லாந்தை எதிர்வரும் வெள்ளிக்கிழமையும் (05) எதிர்கொள்கிறது.