January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் நியமனம்

photo: Twitter/BCCI

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட்டை பிசிசிஐ நியமனம் செய்துள்ளது.

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக தற்போது ரவி சாஸ்திரி இருந்து வருகிறார்.

அவருடைய பதவிக் காலம், தற்போது நடைபெற்று வருகின்ற டி-20 உலகக் கிண்ணத் தொடருடன் முடிவடைகிறது.

அதனால், தலைமைப் பயிற்சியாளர் உள்ளிட்ட ஏனைய பதவிகளுக்கு பிசிசிஐ விண்ணப்பங்களைக் கோரியிருந்தது.

இதையடுத்து இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக ராகுல் டிராவிட் பிசிசிஐயிடம் ஒப்புக்கொண்டதாகவும், அதனால் அடுத்த பயிற்சியாளராக அவர் நியமிக்கப்படவுள்ளதாகவும் தகவல் வெளியானது.

இதில் ஐ.பி.எல் தொடரின் 14 ஆவது சீசன் முடிவடைந்த தருவாயில், பிசிசிஐ தலைவர் கங்குலி மற்றும் செயலாளர் ஜெய் ஷாவை துபாயில் சந்தித்து பேசினார் ராகுல் டிராவிட். தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைவராக இருந்த ராகுல் டிராவிட், இந்திய அணியின் பயிற்சியாளர் பொறுப்பை ஏற்க, அந்த சந்திப்பின்போது சம்மதம் தெரிவித்ததாக தகவல் வெளியானது.

இந்த நிலையில், ராகுல் டிராவிட்டை இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமித்துள்ளதாக பி.சி.சி.ஐ நேற்று அறிவித்துள்ளது.

இதுதொடர்பில் பிசிசிஐ தலைவர் சவுரவ் கங்குலி வெளியிட்டுள்ள அறிவிப்பில், இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளராக பதவியேற்கும் ராகுல் டிராவிட்டை வரவேற்கிறேன். அவர் கிரிக்கெட் போட்டிகளில் மிகச்சிறப்பான ஆட்டங்களை வெளிப்படுத்தியிருக்கிறார். அவருடைய புதிய பயணம் இந்திய அணி புதிய உயரத்துக்கு அழைத்துச் செல்லும் என்று நம்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

இதுகுறித்து தெரிவித்துள்ள ராகுல் டிராவிட், இந்திய அணியின் தலைமைப் பயிற்சியாளராக நியமிக்கப்பட்டுள்ளது எனக்கு உண்மையில் பெருமைக்குரியது. நான் இந்தப் பணியை எதிர்நோக்கி காத்திருக்கிறேன். ரவி சாஸ்திரியின் தலைமையில் இந்திய அணி சிறப்பான ஆட்டத்தை வெளிப்படுத்தியுள்ளது. அந்த அணியை முன்னோக்கி அழைத்துச் செல்ல விரும்புகிறேன் என்று தெரிவித்துள்ளார்.

ராகுல் டிராவிட் 2016 – 2019 வரையில் இந்திய 19 வயதுக்குட்பட்ட கிரிக்கெட் அணி மற்றும் இந்திய A அணியின் பயிற்சியாளராக பணியாற்றி உள்ளார். அத்துடன், கடந்த ஜுலை மாதம் இந்தியா – இலங்கை மோதிய ஒருநாள் மற்றும் டி-20 தொடரில் இந்திய அணியின் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.