photo: Twitter/ Yuvaraj Singh
சர்வதேச கிரிக்கெட்டிலிருந்து ஓய்வை அறிவித்திருந்த இந்திய அணியின் நட்சத்திர சகலதுறை வீரரான யுவராஜ் சிங், அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் மீண்டும் கிரிக்கெட் போட்டிகளில் களமிறங்கவுள்ளதாக அறிவித்துள்ளார்.
கடந்த 2011 ஆம் ஆண்டில் இந்திய அணி உலகக் கிண்ணத்தை வெல்ல முக்கிய காரணமாக இருந்தவர்களில் யுவராஜ் சிங்கும் ஒருவர். அதேபோல், 2007 இல் நடைபெற்ற டி-20 உலகக் கிண்ணத்தில் இங்கிலாந்துக்கு எதிராக 6 பந்துகளில் 6 சிக்ஸர் விளாசி சாதனை படைத்தார்.
யுவராஜ் சிங், இந்திய அணியிலிருந்து ஓய்வை அறிவித்தாலும்கூட, மீண்டும் இந்திய அணிக்கு திரும்ப வேண்டும் என அவரது ரசிகர்கள் தொடர்ந்து கோரிக்கை வைத்து வருகின்றனர்.
இந்த நிலையில், தற்போது, டி-20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணி, பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்துக்கு எதிராக தோல்வியைத் தழுவி அரை இறுதி வாய்ப்பை கிட்டத்தட்ட இழந்துவிட்ட நிலையில், யுவராஜ் சிங் மீண்டும் இந்திய அணிக்குத் திரும்ப வேண்டும் என்ற கோரிக்கை மேலும் வலுக்க ஆரம்பித்துள்ளது.
இந்த கோரிக்கைக்கு செவி சாய்த்துள்ள யுவராஜ் சிங், ‘கடவுள்தான் உங்கள் தலைவிதியைத் தீர்மானிக்கிறார். மக்கள் கோரிக்கை வைத்து வருவதால், நான் அடுத்த ஆண்டு பெப்ரவரி மாதம் முதல் கிரிக்கெட்டுக்கு திரும்புவேன். உங்கள் அன்புக்கும் வாழ்த்துக்கும் நன்றி. இது நமது அணி. கடுமையான நேரங்களிலும் உண்மையான ரசிகர்கள் இந்திய அணிக்கு ஆதரவு அளிப்பார்கள்’ எனத் தெரிவித்துள்ளார்.
புற்றுநோயால் பாதிக்கப்பட்டு அதிலிருந்து மீண்டுவந்த யுவராஜ் சிங் இந்திய அணியில் இடம்பெற்றாலும் போர்ம் இல்லாமல் தவித்ததால் அணியிலிருந்து நீக்கப்பட்டார். இதையடுத்து, 2019 ஆம் ஆண்டு ஜூன் மாதம் அனைத்து வகையான கிரிக்கெட் போட்டிகளில் இருந்தும் யுவராஜ் சிங் ஓய்வு பெற்றார்.
எனினும், 2020-21 ஆம் ஆண்டு சையத் முஷ்டாக் அலி கிண்ணப் போட்டியில் பஞ்சாப் அணியில் உத்தேச வீரர்கள் பட்டியலில் யுவராஜ் சிங் இடம்பெற்ற போதிலும் அவர் அதில் இடம்பெறவில்லை.
எவ்வாறாயினும், பி.சி.சி.ஐ விதிமுறைப்படி இந்திய அணியிலிருந்து ஓய்வு அறிவித்த ஒருவர் மட்டுமே வெளிநாடுகளில் நடக்கும் டி- 20 பிரிமியர் லீக் போன்ற போட்டிகளில் பங்கேற்க முடியும். இதற்காகவே, யுவராஜ் சிங் ஓய்வு அறிவித்துவிட்டு கனடா பிரிமியர் லீக் தொடரில் பங்கேற்றார்.
இந்த நிலையில், அவர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்பட்டால், அது தவறான உதாரணமாகிவிடும். இதன் காரணமாக, அவர் மீண்டும் அணிக்குள் சேர்க்கப்படுவது இயலாத காரியம் என கிரிக்கெட் விமர்சகர்கள் கருதுகிறார்கள்.