Photo: Sri Lanka Cricket
ஆண்களுக்கான டி-20 கிரிக்கெட் பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் இலங்கையின் நட்சத்திர சுழல்பந்துவீச்சாளர் வனிந்து ஹஸரங்க முதலிடத்தைப் பிடித்துள்ளார்.
இதன்மூலம், லசித் மாலிங்கவிற்குப் பிறகு ஐசிசியின் டி-20 பந்துவீச்சாளர்கள் தரவரிசையில் முதலிடத்தைப் பிடித்த வீரர் என்ற பெருமையை ஹஸரங்க பெற்றுக்கொண்டார்.
நடப்பு டி-20 உலகக் கிண்ணத்தில் இதுவரை 14 விக்கெட்டுகளை வீழ்த்தி அதிக விக்கெட்டுக்களைக் வீழ்த்தியவர்களில் முதலிடத்தில் உள்ள வனிந்து ஹஸரங்க, தென்னாபிரிக்காவுக்கு எதிராக நடைபெற்ற போட்டியில் ஹெட்ரிக் சாதனை படைத்தார்.
அதுமாத்திரமின்றி, இந்த ஆண்டில் நடைபெற்ற டி-20 போட்டிகளில் அதிக விக்கெட்டுக்களை (34) வீழ்த்திய பந்துவீச்சாளராகவும் வனிந்து ஹஸரங்க இடம்பிடித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.
776 புள்ளிகளுடன் தற்சமயம் குறித்த பட்டியலில் ஹசரங்க முதலிடம் வகிக்கும் நிலையில், தென்னாபிரிக்க வீரர் தப்ரைஸ் ஷம்சி 770 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டுள்ளார்.
இதேவேளை, ஐ.சி.சி டி-20 கிரிக்கெட் சகலதுறை ஆட்டக்காரர் பட்டியலிலும் வனிந்து ஹஸரங்க நான்கு இடங்கள் முன்னேறி நான்காவது இடத்தில் உள்ளார்.
இந்தப் பட்டியலில் ஆப்கானிஸ்தான் அணியின் மொஹமட் நபி 271 புள்ளிகளுடன் முதலிடத்தில்;° உள்ளார்.
இதேவேளை, ஐ.சி.சி ஒருநாள் துடுப்பாட்ட வீரர்கள் தரவரிசையில் ஏற்கெனவே முதலிடத்தில் உள்ள பாகிஸ்தான் அணித்தலைவர் பாபர் அசாம், டி-20 துடுப்பாட்ட வீரர்களுக்கான தரவரிசையிலும் தற்போது முதலிடம் பிடித்துள்ளார்.