January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

பெங்களூரை வீழ்த்தி பிளே ஓவ் வாய்ப்பை தக்கவைத்தது சென்னை

ஐ.பி.எல் கிரிக்கெட் தொடரில் பலம் வாய்ந்த பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணியை வெற்றிகொண்டு பிளேவ் ஓவ் சுற்றுக்கான வாய்ப்பை சென்னை அணி தக்கவைத்துக்கொண்டது.

இந்த போட்டியில் வெற்றிபெற்றால் மாத்திரமே பிளே ஓவ் சுற்று வாய்ப்பு கிடைக்கும் என்ற நிலையில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி இன்று பெங்களூர் அணியை எதிர்கொண்டது.

துபாயில் நடைபெற்ற இந்த ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய பெங்களூர் அணி வழமைக்கு மாறாக ஓட்டங்களைப் பெறுவதில் சிரமத்துக்குள்ளானது.

ஆரம்ப துடுப்பாட்ட வீரர்கள் குறைந்த ஓட்டங்களுடன் ஆட்டமிழக்க, அணித்தலைவர் விராத் கோஹ்லியும், ஏபி டிவிலியர் ஸும் இணைந்து 82 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை வலுப்படுத்தினர். என்றாலும் இவர்கள் மந்தகதியில் அந்த ஓட்டங்களைப் பெற்றதால் எதிர்பார்க்காதளவு சவாலான இலக்கை அவர்களால் அடைய முடியவில்லை.

அணித்தலைவர் விராத் கோஹ்லி 50 ஓட்டங்களையும், ஏபி டிவிலியர்ஸ் 39 ஓட்டங்களையும் பெற்றனர். பெங்களூர் ரோயல் செலஞ்சர்ஸ் அணி 6 விக்கெட் இழப்புக்கு 145 ஓட்டங்களைப் பெற்றது.

ஷாம் கரன் 3 விக்கெட்டுகளையும், தீபக் சகார் 2 விக்கெட்டுகளையும் கைப்பற்றினர்.

146 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய சென்னை சூப்பர் கிங்ஸ் அணிக்கு கெய்க்வாட் மற்றும் டு பிளசி ஜோடி நம்பிக்கை அளித்தது. இவர்கள் 46 ஓட்டங்களைப் பகிர்ந்தார்கள். டு பிளசி 25 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அம்பாட்டி ராயுடு 39 ஓட்டங்களைப் பெற்றார்.

சிறப்பாகத் துடுப்பெடுத்தாடிய கெய்க்வாட் 3 சிக்ஸர்களுடன் 65 ஓட்டங்களையும், அணித்தலைவர் மஹேந்திர சிங் தோனி 19 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று வெற்றியை உறுதிசெய்தனர்.

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி 2 விக்கெட் இழப்புக்கு 150 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட்டுகளால் வெற்றிபெற்றது. இந்த வெற்றியானது இவ்வருட ஐ.பி.எல் அரங்கில் சென்னை அணி பெற்ற நான்காவது வெற்றியாகும்.