January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: இந்திய அணி அரை இறுதிக்குச் செல்வதில் சிக்கல்!

Photo: Twitter/ICC

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் பாகிஸ்தான் மற்றும் நியூசிலாந்து அணிகளுக்கு எதிராக தோல்வியைத் தழுவிய இந்தியாவின் அரைஇறுதி வாய்ப்பு ஏறக்குறைய முடிந்து விட்டது என்றே கூற வேண்டும்.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத்தில் குழு 2இல் இடம்பெற்றுள்ள இந்திய அணி,  கடந்த ஒக்டோபர் 24 ஆம் திகதி பாகிஸ்தானுக்கு எதிராக 10 விக்கெட் வித்தியாசத்தில் படுதோல்வி அடைந்தது.

உலகக் கிண்ண வரலாற்றிலேயே முதல் முறையாக பாகிஸ்தானிடம் தோற்று பெருத்த அவமானத்தை சந்தித்தது.

இதனால் அரைஇறுதிக்கு தகுதி பெற 2 ஆவது போட்டியில் வெற்றி பெற்றே தீர வேண்டும் என்ற இக்கட்டான நிலைமையில் நியூசிலாந்தை கடந்த ஞாயிற்றுக்கிழமை சந்தித்த இந்தியா 8 விக்கெட் வித்தியாசத்தில் மீண்டும் படுதோல்வி அடைந்தது.

எனவே, குழு 2 இல் பாகிஸ்தான் அணி அரைஇறுதியை ஏறத்தாழ உறுதி செய்துவிட்டது. மற்றொரு அரை இறுதி இடத்தைப் பிடிக்க மும்முனை போட்டி நிலவுகிறது.

இந்திய அணியை பொறுத்தவரை இனி எஞ்சிய 3 லீக் போட்டிகளிலும் ஆப்கானிஸ்தான், ஸ்கொட்லாந்து, நமீபியா ஆகிய அணிகளை வெற்றி பெற வேண்டும். ஆப்கானிஸ்தான் ஓட்ட வித்தியாச விகிதம் (Net Run Rate) தற்போது 3.097 ஆக உள்ளது.

இந்திய அணி ஆப்கானிஸ்தான் அணியின் ஓட்ட வித்தியாச விகிதத்தைக் குறைக்க வேண்டும். இல்லையென்றால் ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து இடையிலான போட்டியில் வெற்றிபெறும் அணி அரைஇறுதிக்கு முன்னேறும்.

அத்தோடு, ஆப்கானிஸ்தான் அணி, நியூசிலாந்துக்கு எதிரான போட்டியில் வெற்றி பெற வேண்டும். இவ்வாறு முடிவுகள் எல்லாம் சாதகமாக அமைந்தால் இந்தியா, நியூசிலாந்து, ஆப்கானிஸ்தான் அணிகள் தலா 3 வெற்றி, 2 தோல்வி என்று 6 புள்ளிகளுடன் சமநிலையில் இருக்கும்.

அப்போது ஓட்ட வித்தியாச விகிதத்தில் முன்னிலை வகிக்கும் அணி அடுத்த சுற்றுக்கு முன்னேறும். பாரிய வெற்றியைப் பெற்று நல்ல ஓட்ட வித்தியாச விகிதத்தில் இந்தியா இருக்கும் பட்சத்தில் அரைஇறுதிக்குச் செல்லும் வாய்ப்பு ஏற்படும்.

மாறாக ஆப்கானிஸ்தானுக்கு எதிரான போட்டியில் இந்தியா தோற்கும் பட்சத்தில் இந்தியா, போட்டியில் இருந்து வெளியேறும். அதன்பிறகு நியூசிலாந்து- ஆப்கானிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டியில் எந்த அணி வெற்றி பெறுகிறதோ? அந்த அணி அரைஇறுதியை எட்டும்.

எனவே கிரிக்கெட் விளையாட்டு போற்றுதற்குரிய நிச்சயமின்மைகளால் நிரம்பியது என்ற பழமொழிக்கு இணங்க இந்திய அணியும் காத்திருக்க வேண்டியதுதான்.