November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: அரை இறுதி வாய்ப்பை இழந்தது இலங்கை

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கெதிரான லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிச் சுற்றுக்கு முதல் அணியாக தகுதி பெற்றது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் சார்ஜாவில் நடைபெற்ற 29 ஆவது லீக் ஆட்டத்தில் இங்கிலாந்து – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்த போட்டியின் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி, முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இங்கிலாந்து அணி தொடக்கத்தில் விக்கெட்டுகளை இழந்தாலும், ஜோஸ் பட்லரின் அபாரமான சதத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 4 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 163 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ஜோஸ் பட்லர் 101 ஓட்டங்களையும், இயென் மோர்கன் 40 ஓட்டங்களையும் எடுத்தனர்.

இலங்கை அணி தரப்பில் வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய இலங்கை அணி ஆரம்பத்திலேயே பெதும் நிஸ்ஸங்க, குசல் பெரேரா ஆகியோரது விக்கெட்டுகளை இழந்தது. அதன்பின் களமிறங்கிய சரித் அசலங்க (21), அவிஷ்க பெர்னாண்டோ (13), பானுக ராஜபக்ஸ (26), தசுன் ஷானக (26) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இருப்பினும் அடுத்து களமிறங்கிய வனிந்து ஹஸரங்க அதிரடியாக விளையாடி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றார். பின் அவரும் 34 ஓட்டங்களில் ஆட்டமிழந்து பெவிலியன் திரும்பினார்.

இறுதியில் இலங்கை அணி 19 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 137 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் இங்கிலாந்து அணி 26 ஓட்டங்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றதுடன், புள்ளிப் பட்டியலில் முதலிடத்துக்கு முன்னேறி டி-20 உலகக் கிண்ணத் தொடரின் அரையிறுதி சுற்றுக்கு முன்னேறியது.

மறுபுறத்தில் இலங்கை அணி, மேற்கிந்திய தீவுகளுக்கு எதிரான ஒரு போட்டி எஞ்சியிருக்கும் நிலையில், அரையிறுதிக்கான வாய்ப்பை இழந்துள்ளது.