July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

(காணொளி) யாழ். கிரிக்கெட் வீரர்களுக்கு தேசிய மட்டத்தில் உள்ள சவால்கள் என்ன?

இலங்கையில் அடுத்த மாதம் ஆரம்பமாகவுள்ள எல்பிஎல் (லங்கன் பிரிமியர் லீக் தொடரில்) விளையாடும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் (Jaffna Stallions) இடம்பெற்றுள்ள யாழ். மாவட்ட கிரிக்கெட் வீரர்களை அறிமுகம் செய்யும் நிகழ்வும் ஊடக சந்திப்பும் யாழ் நகரில் இன்று இடம்பெற்றது.

யாழ்.சென். ஜோன்ஸ் கல்லூரி மற்றும் யாழ்.மத்திய கல்லூரிகளின் கிரிக்கெட் வீரர்களான வி. வியாஸ்காந்த், தி. டினோஷன் மற்றும் க. கபில் ராஜ் ஆகிய மூவரும் இந்த நிகழ்வில் அறிமுகம் செய்து வைக்கப்பட்டனர்.

இதன்போது யாழ்.மாவட்ட கிரிக்கெட் வீரர்கள் தேசிய மட்டத்தில் எதிர்கொள்ளும் சவால்கள் பற்றி ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியின் யாழ். வீரர்கள் மூவரும் ஊடகவியலாளர்களுக்கு விளக்கமளித்தனர்.

இந்த சந்தர்ப்பத்தை சிறப்பாகப் பயன்படுத்தி சர்வதேச கிரிக்கெட்டில் முன்னேறுவதற்கு எதிர்பார்ப்பதாகவும் அவர்கள் தெரிவித்தனர்.

எதிர்காலத்தில் வட மாகாணத்துக்கென தனியொரு கிரிக்கெட் அணியை உருவாக்கும் எண்ணம் உள்ளதாகவும், இலங்கையின் ஏனைய பாகங்களைச் சேர்ந்த தொழில்முறை கிரிக்கெட் வீரர்களும் சர்வதேச வீரர்களும் அணிக்குள் உள்வாங்கப்பட்டு தொழில்முறை அணி ஒன்று உருவாக்கப்படும் என்றும் போட்டி ஏற்பாட்டுக் குழுவினர் இதன்போது தெரிவித்தனர்.

5 அணிகள் பங்குபற்றும் எல்பிஎல் இருபது20 கிரிக்கெட் தொடர் எதிர்வரும் நவம்பர் 21 ஆம் திகதி முதல் டிசம்பர் 13 ஆம் திகதி வரை நடைபெறவுள்ளது.

திசர பெரேரா, டாவிட் மாலன், சொஹைப் மாலிக் போன்றோரும் ஜப்னா ஸ்டாலியன்ஸ் அணியில் விளையாடுகின்றனர்.