Photo: Twitter/ICC
டி-20 உலகக் கிண்ணத்தில் அவுஸ்திரேலிய அணிக்கெதிரான சுப்பர் 12 லீக் போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்றது.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் சனிக்கிழமை இரவு துபாயில் நடைபெற்ற 26ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து – அவுஸ்திரேலிய அணிகள் மோதின.
இதில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பந்துவீசியது.
அதன்படி முதலில் களமிறங்கிய அவுஸ்திரேலிய அணி 20 ஓவர்கள் முடிவில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அந்த அணி சார்பில் அதிகபட்சமாக ஆரோன் பிஞ்ச் 44 ஓட்டங்களை எடுத்தார்.
இங்கிலாந்து அணி தரப்பில் கிறிஸ் ஜோர்டன் 3 விக்கெட்டுக்களையும், கிறிஸ் வோக்ஸ் 2 விக்கெட்டுக்களையும் வீழ்த்தினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணிக்கு ஆரம்ப வீரர் ஜோஸ் பட்லரின் அதிரடியில் 11.4 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 8 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணியை வீழ்த்தியது.
இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜோஸ் பட்லர் 71 ஓட்டங்களை எடுத்து அசத்தினார்.
இந்த வெற்றியின் மூலம் குழு 1இல் 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்றுக்கொண்ட இங்கிலாந்து அணி, அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதிசெய்தது.