November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப்: கோலூன்றிப் பாய்தலில் யாழ். வீரர் புவிதரனுக்கு தங்கப் பதக்கம்

99 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் போட்டியில் ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் பங்குபற்றிய யாழ்ப்பணத்தை சேர்ந்த வீரர் அருந்தவராசா புவிதரன், 5 மீட்டர் உயரம் பாய்ந்து தங்கப்பதக்கம் வென்றார்.

இலங்கை மெய்வல்லுனர் சங்கத்தினால் ஏற்பாடு செய்யப்பட்டுள்ள 99 ஆவது தேசிய மெய்வல்லுனர் சம்பியன்ஷிப் தொடரின் இரண்டாவது அத்தியாயம் நேற்று கொழும்பு சுகததாச விளையாட்டரங்கில் ஆரம்பமாகியது.

இதில் நேற்று காலை ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தல் போட்டி நடைபெற்றது. இந்தப் போட்டியின் முதல் முயற்சியில் 4.70 மீட்டரை தவறவிட்ட புவிதரன், அதன்பிறகு 4.80, 4.90 மற்றும் 5  மீட்டர் உயரங்களை முதல் முயற்சியிலேயே பாய்ந்து அசத்தினார்.

மறுபுறத்தில் இஷார சந்தருவன் 5 மீட்டர் உயரத்தை இரண்டாவது முயற்சியில் தாவி புவிதரனுக்கு சவால் அளித்தார்.

இதனையடுத்து, 5.10 மீற்றர் உயரத்தைத் தாவுவதற்கு இருவரும் மேற்கொண்ட மூன்று முயற்சிகளும் தோல்வியில் முடிவடைந்தது.

எனவே, 5 மீட்டர் உயரத்தைத் தாவுவதற்கு இருவரும் மேற்கொண்ட உயரத்தை ஒப்பிடுகையில், புவிதரன் முதலாவது முயற்சியிலும், இஷார சந்தருவன் இரண்டாவது முயற்சியிலும் குறித்த உயரங்களை தாவியிருந்ததால், தங்கப் பதக்கம் புவிதரனுக்கும், வெள்ளிப் பதக்கம் இஷார சந்தருவனுக்கும் வழங்கப்பட்டன.

எனவே, விறுவிறுப்புக்கு மத்தியில் நடைபெற்ற ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில், வடக்கின் நட்சத்திர வீரரான அருந்தவராசா புவிதரன் தங்கப் பதக்கம் வென்று சாதனை படைத்தார்.

அத்துடன், ஆண்களுக்கான கோலூன்றிப் பாய்தலில் இலங்கை சாதனைக்கு சொந்தக்கரராகிய இஷார சந்தருவனை அவர் முதல் முறையாக வீழ்த்தியிருந்தமை மற்றுமொரு சிறப்பம்சமாகும்.

இதேநேரம், 4.80 மீட்டர் உயரத்தைத் தாவிய மற்றுமொரு தேசிய சம்பியான எரங்க ஜனித் வெண்கலப் பதக்கத்தினை வெற்றிகொண்டார்.