July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: தென்னாபிரிக்காவிடம் போராடி தோற்றது இலங்கை

Photo: Twitter ICC

டி- 20 உலகக் கிண்ணத்தில் இலங்கை அணிக்கெதிரான சுப்பர் 12 போட்டியில் தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் த்ரில் வெற்றி பெற்றது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் விறுவிறுப்பாக நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணத் தொடரின் குழு 2-ல் இடம்பெற்றுள்ள தென்னாபிரிக்க மற்றும் இலங்கை அணிகளுக்கு இடையேயான போட்டி நேற்று (30) சார்ஜாவில் நடைபெற்றது.

தென்னாபிரிக்க அணியின் அழைப்பின் பேரில் முதலில் துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி, 20 ஓவர் முடிவில் 142 ஓட்டங்களை எடுத்தது. இலங்கை அணி சார்பில் பெதும் நிஸ்ஸங்க 72 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.

தென்னாபிரிக்க தரப்பில் தப்ரைஸ் ஷம்ஸி, டுவைன் பிரிடோரியஸ் ஆகியோர் தலா 3 விக்கெட்டுக்களை வீழ்த்தினர்.

இதையடுத்து 143 ஓட்டங்கள் என்ற இலக்குடன் களமிறங்கிய தென்னாபிரிக்க அணியின் முன்வரிசை வீரர்கள் குறைந்த ஓட்டங்களில் ஆட்டமிழந்தபோதும், நிதானமாக ஆடிய அணித்தலைவர் டெம்பா பவுமா 46 ஓட்டங்கள் எடுத்து நம்பிக்கை அளித்தார்.

அதன் பின்னர் அபாரமாக ஆடிய டேவிட் மில்லர் அணியின் வெற்றியை உறுதி செய்தார்.

இதில் கடைசி ஓவரில் தென்னாபிரிக்க அணியின் வெற்றிக்கு 15 ஓட்டங்கள் தேவை என்ற நிலையில், முதல் 4 பந்துகளை எதிர்கொண்ட மில்லர் 2 சிக்சர்கள் உட்பட 14 ஓட்டங்களை விளாசினார். 5 வது பந்தை எதிர்கொண்ட ரபாடா பவுண்டரி அடித்து ஆட்டத்தை முடித்து வைத்தார்.

இதன்படி, ஒரு பந்து மீதமிருந்த நிலையில், தென்னாபிரிக்க அணி 4 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அரை இறுதிக்கு முன்னேறும் வாய்ப்பை வலுவாக தக்க வைத்துள்ளது.

இலங்கை சார்பில் வனிந்து ஹஸரங்க 3 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.

இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க புள்ளிப் பட்டியலில் 4 புள்ளிகளுடன் 2வது இடத்தில் உள்ளது. இலங்கை அணி தொடர்ந்தும் 4ஆவது இடத்தை தக்க வைத்துள்ளது.

இந்தத் தோல்வியின் மூலம் இலங்கை அணியின் அரை இறுதி வாய்ப்பு கேள்விக்குறியாகியுள்ளது.