Photo: Twitter/PCB
ஆப்கானிஸ்தானுக்கு எதிரான டி–20 உலகக் கிண்ண சூப்பர் 12 போட்டியில் 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்ற பாகிஸ்தான் அணி, அரையிறுதியை உறுதி செய்தது.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று இரவு துபாயில் நடைபெற்ற 24 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான்- ஆப்கானிஸ்தான் அணிகள் மோதின.
போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஆப்கானிஸ்தான் அணி, மொஹமட் நபி– குலாப்தீன் நைப் ஆகிய இருவரினதும் அதிரடி ஆட்டத்தால் 20 ஓவர்கள் நிறைவில் 6 விக்கெட்டுகளை இழந்து 147 ஓட்டங்களைக் குவித்தது.
இதில் அதிகபட்சமாக அணித்தலைவர் மொஹமட் நபி மற்றும் குலாப்தீன் நைப் ஆகிய இருவரும் தலா 35 ஓட்டங்களையும், நஜிபுல்லாஹ் சத்ரான 22 ஓட்டங்களையும் பெற்றுக்கொண்டனர்.
பாகிஸ்தான் அணியின் பந்துவீச்சில் இமாத் வசிம் 2 விக்கெட்டுகளை வீழ்த்தினார்.
இதையடுத்து, 148 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் பாகிஸ்தான் அணி களமிறங்கியது.
ஆரம்ப வீரர் மொஹமட் ரிஸ்வான் 8 ஓட்டங்களுடனும், பகர் சமான் 30 ஓட்டங்களுடனும், மொஹமட் ஹபீஸ் 10 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்தனர்.
அணித்தலைவர் பாபர் அசாம் பொறுப்புடன் ஆடி அரைச் சதமடித்து 51 ஓட்டங்களில் வெளியேறினார். சொஹைப் மலிக் 19 ஓட்டங்களில் ஆட்டமிழந்தார்.
கடைசி கட்டத்தில் ஆசிப் அலி அதிரடியாக ஆடி, ஒரே ஓவரில் 4 சிக்ஸர்கள் அடித்து அணியை வெற்றிக்கு அழைத்துச் சென்றார்.
இதன்மூலம் 19 ஓவர்களில் பாகிஸ்தான் அணி வெற்றியிலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் ஆப்கானிஸ்தானை வீழ்த்தியது.
பாகிஸ்தான் அணிக்காக கடைசி நேரத்திரல் துடுப்பாட்டத்தில் அதிரடி காண்பித்த ஆசிப் அலி, போட்டியின் ஆட்டநாயகன் விருதை தட்டிச் சென்றார்.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி, குழு 2இல் ஹெட்ரிக் வெற்றியோடு 6 புள்ளிகளுடன் முதலிடத்தைப் பெற்று அரை இறுதிக்கான வாய்ப்பை உறுதி செய்தது.