January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ரொனால்டோ பாணியில் கோகோ- கோலா போத்தல்களை அகற்றிய டேவிட் வோர்னர்

போர்த்துக்கல் கால்பந்து வீரர் கிறிஸ்டியானோ ரொனால்டோ பத்திரிகையாளர் சந்திப்பின்போது கோகோ- கோலா போத்தலை அகற்றியதைப் போல, அவுஸ்திரேலிய கிரிக்கெட் வீரர் டேவிட் வோர்னரும் பத்திரிகையாளர் சந்திப்பில் கோகோ – கோலா போத்தல்களை அகற்றிய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கடந்த ஜூன் மாதம் நடைபெற்ற யூரோ- 2020 கிண்ண கால்பந்து போட்டியில் ஹங்கேரி அணிக்கு எதிரான போட்டிக்கு முன் நடைபெற்ற பத்திரிகையாளர் சந்திப்பில் ரொனால்டோ கலந்து கொண்டார்.

அவர் பேச்சை ஆரம்பிக்க முன் மேசையில் வைக்கப்பட்டிருந்த கோகோ- கோலா போத்தல்களை நீக்குமாறு கூறிவிட்டு, தண்ணீரை குடியுங்கள் என்று ரொனால்டோ தெரிவித்தார்.

ரொனால்டோவின் இந்த செயலுக்குப்பின் உலகளவில் கோகோ-கோலாவின் பங்குகள் பங்குச் சந்தையில் கடுமையாக வீழ்ச்சி அடைந்தன. ஏறக்குறைய 520 கோடி டொலர்கள் கோகோ – கோலா நிறுவனத்துக்கு இழப்பு ஏற்பட்டது.

அதன்பின் கோகோ – கோலா நிறுவனம் வெளியிட்ட அறிவிப்பில் ‘ஒவ்வொருவரும் தங்களுக்கு விருப்பமானவற்றை தேர்ந்தெடுத்து குடிக்கலாம். ஒவ்வொருவருக்கும் வித்தியாசமான சுவை, தேவை இருக்கிறது’ எனத் தெரிவித்தது.

இந்த நிலையில் இதேபோன்ற சம்பவம்  டி- 20 உலகக் கிண்ணப் போட்டியிலும் இடம்பெற்றது.

இலங்கைக்கு எதிரான போட்டியில் 7 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வென்றது. அண்மைக்காலமாக துடுப்பாட்டத்தில் பிரகாசிக்காத அவுஸ்திரேலிய வீரர் டேவிட் வோர்னர் 65 ஓட்டங்களை எடுத்து அந்த அணியின் வெற்றியில் முக்கிய பங்கு வகித்தார்.

இந்த நிலையில் போட்டியின் பிறகு இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பில் டேவிட் வோர்னர் கலந்து கொண்டார். அப்போது மேசையில் தண்ணீர் போத்தல்களும், கோகோ-கோலா போத்தல்களும் வைக்கப்பட்டிருந்தன. இதைப் பார்த்த வோர்னர், இரண்டு கோகோ-கோலா போத்தல்களையும் எடுத்து மேசையின் கீழ் வைக்க முயற்சித்தார்.

இதைப் பார்த்த ஐ.சி.சி.யின் ஊடகப் பிரதிநிதி விரைந்து அந்த போத்தல்களை பெற முயன்றார் .அப்போது வோர்னர், ‘இந்த போத்தல்களை நான் திரும்ப வைக்க வேண்டுமா’ என சிரித்துக் கொண்டே கேட்டார்.

பின்னர் மேசையின் மீது மீண்டும் கோகோ- கோலா போத்தல்களை வைத்த வோர்னர்,

‘ரொனால்டோவுக்கு போதுமானதாக இருந்தால் எனக்கும் போதுமானதுதான்’ எனத் தெரிவித்தார்.

ஆனால், ரொனால்டோ கூறியதை போன்று தண்ணீர் குடியுங்கள் என்று வோர்னர் ஏதும் சொல்லவில்லை.

எவ்வாறாயினும், கோகோ- கோலா போத்தல்களை அகற்றிய வோர்னர், மீண்டும் அதை மேசையில் வைத்ததை பலரும் சமூக வலைத்தளங்கள் வாயிலாக கேலி செய்து வருகின்றனர்.

இம்முறை டி-20 உலகக் கிண்ணத் தொடரில் பிரதான அனுசரணை நிறுவனங்களில் ஒன்றாக கோகோ- கோலா நிறுவனம் விளங்குகிறது. அத்துடன், இந்த நிறுவனம் 2023 வரை ஐ.சி.சி.யினால் நடத்தப்படுகின்ற முக்கிய கிரிக்கெட் தொடர்களில் அனுசரணையாளராக ஒப்பந்தம் செய்யப்பட்டுள்ளமை குறிப்பிடத்தக்கது.