July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: கடைசிப் பந்தில் பங்களாதேஷை வீழ்த்தியது மேற்கிந்திய தீவுகள்

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத்தில் பங்களாதேஷ் அணிக்கெதிரான போட்டியில் 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணி த்ரில் வெற்றியை பதிவு செய்தது.

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் இன்று (29) சார்ஜாவில் நடைபெற்ற 23 ஆவது லீக் போட்டியில் மேற்கிந்திய தீவுகள் – பங்களாதேஷ் அணிகள் மோதின. இதில் நாணய சுழற்சியில் வென்ற பங்களாதேஷ் அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி ரோஸ்டன் சேஸ், நிக்கோலஸ் பூரன் ஆகியோரது நிதான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் முடிவில் 7 விக்கெட்டுகளை இழந்து 142 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக நிக்கோலஸ் பூரன் 40 ஓட்டங்களையும், ரோஸ்டன் சேஸ் 39 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பங்களாதேஷ் அணி தரப்பில் மெஹிதி ஹசன், முஸ்தபிசூர் ரஹ்மான், சொரிபுல் இஸ்லாம் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

அதன்பின் இலக்கை துரத்திய பங்களாதேஷ் அணியின் முன்வரிசை வீரர்கள் சீரான இடைவெளியில் விக்கெட்டுகளை இழந்து தடுமாறினர்.

எனினும், லிட்டன் தாஸ் – மஹ்முதுல்லா ஜோடி அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தி அணியை வெற்றியை நோக்கி அழைத்து சென்றனர். இதில் லிட்டன் தாஸ் 44 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்து வெளியேறினார்.

இதனால் பங்களாதேஷ் அணியின் வெற்றிக்கு கடைசி ஓவரில் 13 ஓட்டங்கள் தேவை என்ற நிலை ஏற்பட்டது. இதனால் இப்போட்டியில் யார் வெற்றி பெற்று தொடரில் நீடிப்பார் என்ற பரபரப்பு தொற்றிக் கொண்டது.

இறுதியில் கடைசி ஓவரை வீசிய ஆண்ட்ரே ரஸல் அபாரமாக பந்துவீசி 9 ஓட்டங்களை மட்டுமே கொடுத்தார். இதனால் 20 ஓவர்கள் முடிவில் பங்களாதேஷ் அணி 5 விக்கெட் இழப்பிற்கு 139 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன்மூலம் மேற்கிந்திய தீவுகள் அணி 3 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணியை வீழ்த்தி த்ரில் வெற்றி பெற்றது.

எனவே இந்தத் தோல்வியின் மூலம் பங்களாதேஷ் அணி, தொடர்ச்சியாக 3 தோல்விகளை சந்தித்து நடப்பு டி- 20 உலகக் கிண்ணத் தொடருக்கான அரை இறுதி வாய்ப்பை தவறவிட்டது.