July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: அவுஸ்திரேலியாவிடம் தோற்றது இலங்கை

Photo: Twitter/ICC

இலங்கை அணிக்கெதிரான டி-20 உலகக் கிண்ண சுப்பர் 12 லீக் போட்டியில் அவுஸ்திரேலிய அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் இலகு வெற்றியை பதிவு செய்தது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற 22 ஆவது லீக் போட்டியில் அவுஸ்திரேலியா – இலங்கை அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இலங்கை அணி 20 ஓவர்களில் 6 விக்கெட்டுகளை இழந்து 154 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக குசல் பெரேரா, சரித் அசலங்க தலா 35 ஓட்டங்களையும், பானுக ராஜபக்ஷ 33 ஓட்டங்களையும் எடுத்தனர்.

அவுஸ்திரேலிய அணியின் பந்து வீச்சில் பெட் கம்மின்ஸ், மிச்சல் ஸ்டார்க் மற்றும் அடம் ஷாம்பா ஆகியோர் தலா இரண்டு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய அவுஸ்திரேலிய அணி,  ஆரோன் பின்ச் மற்றும் டேவிட் வோர்னரின் அதிரடியான துடுப்பாட்டத்துடன் சிறந்த ஆரம்பத்தை பெற்றதுடன், 17 ஓவர்கள் நிறைவில் 3 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து வெற்றியிலக்கை அடைந்தது.

அதிரடியாக ஆடிய டேவிட் வோர்னர் அதிகபட்சமாக 42 பந்துகளில் 65 ஓட்டங்களை பெற்றுக் கொண்டதுடன், ஆரோன் பின்ச் 37 ஓட்டங்களையும், ஸ்டீவ் ஸ்மித் 28 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

இலங்கை அணி சார்பில், வனிந்து ஹஸரங்க 2 விக்கெட்டுகளையும், தசுன் ஷானக ஒரு விக்கெட்டினையும் வீழ்த்தினர்.

இந்த வெற்றியின் மூலம், அவுஸ்திரேலிய அணி 4 புள்ளிகளை பெற்றுக் கொண்டு, குழு 1 புள்ளிப் பட்டியலில் 2 ஆவது இடத்துக்கு முன்னேறியுள்ளது.

இந்தத் தோல்வியுடன் இலங்கை அணி, குழு 1 புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்துக்கு பின்தள்ளப்பட்டது.