November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தொழுகை குறித்த சர்ச்சை கருத்து: மன்னிப்புக் கோரினார் வக்கார் யூனிஸ்

பாகிஸ்தான் கிரிக்கெட் அணியின் முன்னாள் வேகப்பந்து வீச்சாளரான வக்கார் யூனிஸ் தொலைக்காட்சி நேரலை ஒன்றில் தெரிவித்த கருத்து ஒன்று சமூக வலைத்தளத்தில் பெரும் சர்ச்சையையும் கொந்தளிப்பையும் ஏற்படுத்தியதை அடுத்து அவர் மன்னிப்பு கோரியுள்ளார்.

துபாயில் நடைபெற்று வரும் டி-20 உலகக் கிண்ணத் தொடரில் கடந்த 24 ஆம் திகதி நடைபெற்ற போட்டியில் இந்தியாவும், பாகிஸ்தானும் மோதின.

மிகவும் எதிர்பார்க்கப்பட்ட இப்போட்டியில் ரிஸ்வான் (79) பாபர் அசாம் (68) ஆகியோரின் அதிரடியான ஆட்டத்தினால் இந்திய அணியை 10 விக்கெட் வித்தியாசத்தில் பாகிஸ்தான் வீழ்த்தியது.

டி-20 உலகக் கிண்ண வரலாற்றில் இந்திய அணியை பாகிஸ்தான் முதல் முறையாக வென்று வரலாறு படைத்தது.

இதனால் பாகிஸ்தான் ரசிகர்கள் மற்றும் வீரர்கள் இதை கொண்டாடினர். அன்றைய தினம் போட்டி முடிந்தவுடன் பாகிஸ்தானின் யுசுலு நியூஸ் என்ற தொலைக்காட்சியின் நேரலை நிகழ்ச்சியில் பாகிஸ்தான் வீரர்களான வக்கார் யூனிஸ் மற்றும் சொஹைப் அக்தர் ஆகியோர் கலந்து கொண்டனர்.

அப்போது வக்கார் யூனிஸ் ரிஸ்வான் மற்றும் பாபர் அசாம் ஆகியோரின் துடுப்பாட்டத்தை புகழ்ந்து விட்டு, ‘இதை விட சிறப்பானது என்னவென்றால் போட்டியின் நடுவே இந்துக்கள் முன்னிலையில் ரிஸ்வான் நமாஸ் (தொழுகை) செய்ததுதான்’ என கூறினார்.

இந்த கருத்து சமூக வலைத்தளத்தில் பெரும் கொந்தளிப்பை ஏற்படுத்திய நிலையில், கிரிக்கெட் துறையைச் சேர்ந்தவர்கள், ரசிகர்கள் என பல தரப்பினரும் கண்டனம் தெரிவித்தனர்.

இந்திய அணியின் முன்னாள் வீரர் வசீம் ஜாஃபர், வெங்கடேஷ் பிரசாத் ஆகியோரும் கண்டனம் தெரிவித்தனர். இவ்வாறு கடும் எதிர்ப்பு கிளம்பியதை அடுத்து வக்கார் யூனிஸ் மன்னிப்பு கோரியுள்ளார்.

இது குறித்து அவர் வெளியிட்ட டுவிட்டர் பதிவில், ‘உற்சாகம் மிகுதியால் அந்த நேரத்தில் அவ்வாறு தெரிவித்து விட்டேன். பலரின் மனதை காயப்படுத்திய அந்த கருத்தை நான் வேண்டுமென்றே கூறவில்லை. அது தவறானதாகும். இதற்காக என்னை மன்னியுங்கள். விளையாட்டு மக்களை இனம், நிறம், மதம் கடந்து ஒன்றிணைக்கிறது’ என பதிவிட்டுள்ளார்.