January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: முதல் ஓவரில் 3 விக்கெட் வீழ்த்தி நமீபியா வீரர் சாதனை

Photo: Twitter/ICC

டி-20 உலகக் கிண்ணப் போட்டிகளில் முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அதுவும் மூன்று வீரர்களையும் டக் அவுட் செய்த பந்து வீச்சாளர் என்ற சாதனையை நமீபியாவின் ரூபன் ட்ரெம்பல்மேன் படைத்துள்ளார்.

டி-20 உலகக் கிண்ணத் தொடரின் சுப்பர் 12 சுற்றுப் போட்டிகள் தற்போது ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகின்றன.

இந்த நிலையில், நேற்று (27) நமீபியா – ஸ்கொட்லாந்து அணிகளுக்கு இடையே நடைபெற்ற லீக் போட்டியில் நமீபியா அணி, 4 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.

இதனிடையே, குறித்த போட்டியில் நமீபியா அணிக்காக விளையாடிய 23 வயதான வேகப்பந்து வீச்சாளரான ரூபன் ட்ரெம்பல்மேன் டி-20 கிரிக்கெட்டில் புதிய வரலாற்று சாதனையொன்றை நிகழ்த்தியுள்ளார்.

அதன்படி நேற்றைய போட்டியில் ஸ்கொட்லாந்து அணி முதலில் துடுப்பெடுத்தாடியதுடன், முதல் ஓவரை ரூபன் ட்ரெம்பல்மேன் வீசினார்.

இதன்படி, முதல் ஓவரின் முதல் பந்தில் ஸ்கொட்லாந்து அணியின் ஆரம்ப வீரரான முன்சியை க்ளீன் போல்ட் மூலம் ஆட்டமிழக்க வைத்து ஸ்கொட்லாந்து அணியை அதிர வைத்தார்.

பிறகு மூன்றாவது பந்தில் மெக்லாயிட் விக்கெட்டையும், 4 ஆவது பந்தில் அந்த அணியின் தலைவர் பெர்ரிங்க்டனின் விக்கெட்டையும் வீழ்த்தினார்.

இதன்மூலம் டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் வரலாற்றில் முதல் ஓவரில் மூன்று விக்கெட்டுகளை வீழ்த்திய முதல் வீரர் என்ற பெருமையை ரூபன் ட்ரெம்பல்மேன் பெற்றுக் கொண்டார்.

அத்துடன், முதல் ஓவரிலேயே 3 விக்கெட்டுகளை அதுவும், மூன்று வீரர்களையும் டக் அவுட் செய்த பந்து வீச்சாளர் என்ற சாதனையையும் அவர் படைத்துள்ளார்.

இதேவேளை, இந்தப் போட்டியில் 4 ஓவர்கள் வீசிய ரூபன் ட்ரெம்பல்மேன் 17 ஓட்டங்களை மட்டும் விட்டுக் கொடுத்து 3 விக்கெட்டுகளை வீழ்த்தியுள்ளார்.