February 22, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

இந்திய அணியின் பயிற்சியாளர் பதவிக்கு ராகுல் டிராவிட் விண்ணப்பம்

இந்திய கிரிக்கெட் அணியின் தலைமைப் பயிற்சியாளர் பதவிக்கு முன்னாள் வீரர் ராகுல் டிராவிட் விண்ணப்பித்துள்ளார்.

இந்திய தேசிய கிரிக்கெட் அகடமியின் தலைமை பொறுப்பில் ராகுல் டிராவிட் இருந்து வரும் நிலையில், அந்தப் பதவிக்கு வி.வி.எஸ்.லக்ஷ்மன் நியமிக்கப்படலாம் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியத்தில் தற்போது நடைபெற்று வரும் டி- 20 உலகக் கிண்ணத் தொடருடன் ரவி சாஸ்திரியின் பொறுப்புக் காலம் நிறைவடையும் நிலையில், அடுத்து ராகுல் டிராவிட் அந்தப் பொறுப்புக்கு வருவது உறுதியாகியிருக்கிறது.

இருப்பினும் அதற்கான நடவடிக்கைகளை பி.சி.சி.ஐ முறைப்படி மேற்கொள்வதன் அடிப்படையில் தற்போது அவர் விண்ணப்பித்துள்ளார்.

இறுதியாக கடந்த ஜூலை மாதம் இலங்கையில் நடைபெற்ற இந்திய அணியின் ஒருநாள் மற்றும் டி- 20 தொடரின் போது ராகுல் டிராவிட் இடைக்கால பயிற்சியாளராக செயல்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதனிடையே, தேசிய கிரிக்கெட் அகடமியில் அவருடன் பணியாற்றுகின்ற பந்து வீச்சுப் பயிற்சியாளர் பரஸ் மாம்ப்ரே, களத்தடுப்பு பயிற்சியாளர் அபய் சர்மா ஆகிய இருவரும் ஏற்கெனவே தங்களது பணிக்காக விண்ணப்பித்திருப்பது குறிப்பிடத்தக்கது.

அதேபோல, இந்திய அணியின் முன்னாள் விக்கெட் காப்பாளர் அஜய் ராத்ராவும் களத்தடுப்பு பயிற்சியாளர் பதவிக்கு விண்ணப்பித்துள்ளமை குறிப்பிடத்தக்கது.