
Photo: Twitter/ICC
பங்களாதேஷ் அணிக்கெதிரான டி-20 உலகக் கிண்ண போட்டியில் இங்கிலாந்து அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் புதன்கிழமை (27) மாலை நடைபெற்ற 20 ஆவது லீக் போட்டியில் இங்கிலாந்து – பங்களாதேஷ் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 124 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இங்கிலாந்து அணி தரப்பில் டைமல் மில்ஸ் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.
இதனைத் தொடர்ந்து 125 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற எளிய இலக்குடன் இங்கிலாந்து அணியின் ஆரம்ப வீரர்களாக ஜேசன் ரோய் மற்றும் ஜோஸ் பட்லர் களமிறங்கி சிறப்பான ஆரம்பத்தைக் கொடுத்தனர்.
இதில் ஜோஸ் பட்லர் 18 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார். அடுத்து வந்த டாவிட் மலானுடன் ஜோடி சேர்ந்த ஜேசன் ரோய் அதிரடி ஆட்டத்தை வெளிப்படுத்தினார். அரைச்சதம் விளாசிய அவர் 38 பந்துகளில் 61 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.
இறுதியில் இங்கிலாந்து அணி 14.1 ஓவரில் 2 விக்கெட்டுகளை மட்டும் இழந்து 126 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
மேலும் இந்தப் போட்டி முடிவுடன் 2 நேரடி வெற்றிகளுடன் 4 புள்ளிகளை பெற்றுள்ள இங்கிலாந்து குழு 1 இல் முதலிடத்தை வகிக்கின்றது.