Photo: Twitter/ICC
மேற்கிந்திய தீவுகள் அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண சுப்பர் 12 லீக் போட்டியில் தென்னாபிரிக்க அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றியீட்டியது.
இதன்மூலம் இம்முறை டி20 உலகக் கிண்ணத்தில் தென்னாபிரிக்க அணி முதல் வெற்றியைப் பதிவுசெய்ய, மேற்கிந்திய தீவுகள் அணி தொடர்ச்சியாக 2ஆவது தோல்வியை சந்தித்தது.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் 26 ஆம் திகதி துபாயில் நடைபெற்ற 18 ஆவது லீக் போட்டியில் தென்னாபிரிக்கா – மேற்கிந்திய தீவுகள் அணிகள் பலப்பரீட்சை நடத்தின.
இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற தென்னாபிரிக்க அணி களத்தடுப்பை தேர்வு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 143 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்டது.
தென்னாபிரிக்க அணியின் பந்துவீச்சில் டுவைன் பிரிட்டோரியஸ் 3 விக்கெட்டுக்களையும், கேசவ் மஹராஜ் 2 விக்கெட்டுக்களையும் கைப்பற்றினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய தென்னாபிரிக்க அணி, 18.2 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 144 ஓட்டங்களை எடுத்து 8 விக்கெட்டுக்கள் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ரஸ்ஸி வான் வென்டர் டஸன் 51 பந்துகளில் 43 ஓட்டங்களையும், எய்டன் மார்க்ரம் 26 பந்துகளில் 51 ஓட்டங்களையும் எடுத்தனர்.
இந்த வெற்றியின் மூலம் தென்னாபிரிக்க அணி, குழு 1 இல் இரண்டு புள்ளிகள் பெற்று புள்ளிப் பட்டியலில் 4 ஆவது இடத்தில் உள்ளது. மறுபுறத்தில் 2 தோல்விகளை சந்தித்த மேற்கிந்திய தீவுகள் அணி கடைசி இடத்தைப் பெற்றுக்கொண்டது.