Photo: Twitter/ICC
நியூசிலாந்து அணிக்கெதிரான டி20 உலகக் கிண்ண சுப்பர் 12 லீக் போட்டியில் பாகிஸ்தான் அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்று அசத்தியது.
இதன்மூலம் அரை இறுதிக்கு செல்வதற்கான தனது வாய்ப்பை பாகிஸ்தான் அணி அதிகரித்துக் கொண்டது.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் 26 ஆம் திகதி இரவு சார்ஜாவில் நடைபெற்ற 19 ஆவது லீக் போட்டியில் பாகிஸ்தான் – நியூசிலாந்து அணிகள் விளையாடின.
இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.
அதன்படி முதலில் களமிறங்கிய நியூசிலாந்து அணி ஹாரிஸ் ரவூப்பின் அபாரமான பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட் இழப்பிற்கு 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதில் அதிகபட்சமாக டெவோன் கொன்வே, டெரில் மிச்செல் தலா 27 ஓட்டங்களைச் எடுத்தனர்.
பாகிஸ்தான் அணி தரப்பில் ஹாரிஸ் ரவூப் 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி அசத்தினார்.
இதையடுத்து எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய பாகிஸ்தான் அணி, 18.5 ஓவர்களிலேயே இலக்கை எட்டி, 5 விக்கெட் வித்தியாசத்தில் நியூசிலாந்தை வீழ்த்தி வெற்றிபெற்றது.
பாகிஸ்தான் அணி சார்பில் மொஹமட் ரிஸ்வான் அதிகபட்சமாக 33 ஓட்டங்களை எடுத்தார்;.
இந்த வெற்றியின் மூலம் பாகிஸ்தான் அணி நடப்பு டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இரண்டாவது வெற்றியைப் பதிவுசெய்து அசத்தியது.