photo:ipl_twitter
ஆர்.பி.எஸ்.ஜி குழுமம் மற்றும் சர்வதேச முதலீட்டு நிறுவனமான சி.சி.வி கபிடெல் ஆகியவை ஐ.பி.எல்.இன் இரண்டு புதிய உரிமையாளர்களாக தெரிவு செய்யப்பட்டுள்ளன.
இந்தியாவின் முன்னணி நிறுவனமான ஆர்.பி.சஞ்ஜெய் கொயங்கா குழுமம் 7,090 கோடி இந்திய ரூபாய்க்கு லக்னோ அணியையும் லக்சம் பேர்க்கின் சி.சி.வி. கபிடெல் நிறுவனம் 5,600 கோடி இந்திய ரூபாய்க்கு அகமதாபாத் அணியையும் வாங்கியுள்ளன.
2022 ஆம் ஆண்டுக்கான இரண்டு புதிய அணிகளை தெரிவு செய்வதற்கான ஏலம், டுபாயின் தாஜ் ஹோட்டலில் இடம்பெற்றிருந்ததை தொடர்ந்தே இவ்விரு அணிகளும் அறிவிக்கப்பட்டுள்ளன.
ஐ.பி.எல் தொடரில் தற்போது 8 அணிகள் விளையாடி வருவதுடன், 2022 ஆம் ஆண்டின் 15 ஆவது ஐ.பி.எல் தொடரில் 10 அணிகள் விளையாடவுள்ளன.
புதிய அணிகளுக்கான விலைமனுக் கோரலை கடந்த ஆகஸ்ட் மாதம் இறுதியில் இந்திய கிரிக்கெட் கட்டுப்பாட்டு சபை வெளியிட்டது.
விலைமனு விண்ணப்ப கட்டணமாக மீளத்தரப்படாத 10 இலட்சம் இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டது.
புதிய அணிகளை வாங்குவதற்காக மொத்தம் 22 நிறுவனங்கள் விலைமனு கோரியிருந்த நிலையில், இடம்பெற்ற ஏலத்தை தொடர்ந்து, அதில் குறித்த இரு நிறுவனங்களும் தெரிவு செய்யப்பட்டுள்ளன.
அணியொன்றின் அடிப்படை விலையாக 2,000 கோடி இந்திய ரூபாய் நிர்ணயிக்கப்பட்டிருந்தமை குறிப்பிடத்தக்கது.