July 4, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: இந்தியாவை வீழ்த்தி வரலாறு படைத்தது பாகிஸ்தான்

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இந்தியாவை 10 விக்கெட் வித்தியாசத்தில் வீழ்த்தி பாகிஸ்தான் அணி வரலாறு படைத்தது.

இதன்மூலம், ஐசிசி இனால் நடத்தப்படுகின்ற உலகக் கிண்ணத் தொடரொன்றில் 29 ஆண்டுகளுக்குப் பிறகு இந்தியாவிற்கு எதிராக பாகிஸ்தான் அணி வெற்றியீட்டி சாதனை படைத்தது.

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் கிரிக்கெட் ரசிகர்கள் பெரிதும் எதிர்பார்த்து காத்திருந்த இந்தியா – பாகிஸ்தான் அணிகளுக்கு இடையேயான போட்டி துபாயில் நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற பாகிஸ்தான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய இந்திய அணியின் ஆரம்ப வீரர் ரோகித் சர்மா சந்தித்த முதல் பந்திலும், கே.எல்.ராகுல் 3 ஓட்டங்களுடனும் ஷஹீன் அப்ரிடியின் ஓவரில் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து ஏமாற்றினர்.

அதன்பின் களமிறங்கிய சூர்யகுமார் யாதவ் அதிரடியாக விளையாட முயற்சித்து 11 ஓட்டங்களில் விக்கெட்டை இழந்தார்.

இதையடுத்து ஜோடி சேர்ந்த விராட் கோலி – ரிஷப் பாண்ட் ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி வலுச் சேர்த்தனர்.

இதில் தொடர்ந்து அதிரடியான ஆட்டத்தை வெளிப்படுத்திய ரிஷப் பாண்ட் 39 ஓட்டங்களுடன் ஆட்டமிழந்தார்.

இருப்பினும் மறுமுனையில் அதிரடியாக ஆட்டத்தை வெளிப்படுத்திய அணித் தலைவர் விராட் கோலி அரை சதம் அடித்து 57 ஓட்டங்களை எடுத்து ஆட்டமிழந்தார்.

இதனால் 20 ஓவர்கள் முடிவில் இந்திய அணி 7 விக்கெட்டுகளை இழந்து 151 ஓட்டங்களை எடுத்தது. இந்திய அணி தரப்பில் அதிகபட்சமாக விராட் கோலி 57 ஓட்டங்களையும், ரிஷப் பாண்ட் 39 ஓட்டங்களையும் எடுத்தனர்.

பாகிஸ்தான் அணி தரப்பில் ஷஹீன் அப்ரிடி 3 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து 152 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய பாகிஸ்தான் அணி, அணித்தலைவர் பாபர் அசாம், மொஹமட் ரிஸ்வானின் அதிரடி ஆட்டத்தால் 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

எந்தவித அழுத்தமும் இல்லாமல் இந்திய பந்து வீச்சாளர்களுக்கு எதிராக அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய பாபர் அசாம் 68 ஓட்டங்களையும், மொஹமட் ரிஸ்வான் 79 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் எடுத்தனர்.

இதன்மூலம், டி- 20 உலகக் கிண்ண வரலாற்றில் முதல் முறையாக இந்தியாவுக்கு எதிராக பாகிஸ்தான் வெற்றியை  பதிவு செய்தது.

அதேபோல, டி- 20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக 10 விக்கெட்டுகளால் பாகிஸ்தான் அணி வெற்றியீட்டியதுடன், முதல் முறையாக 10 விக்கெட்டுகளால் இந்தியா தோல்வியைத் தழுவியது.

போட்டியின் ஆட்டநாயகன் விருது பாகிஸ்தானின் ஷஹீன் அப்ரிடிக்கு வழங்கப்பட்டது.