
Photo: Twitter/ICC
சரித் அசலங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் பங்களாதேஷ் அணிக்கெதிரான சுப்பர் 12 போட்டியில் இலங்கை அணி 5 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.
டி-20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றில் இன்று சார்ஜாவில் நடைபெற்ற போட்டியில் இலங்கை, பங்காளதேஷ் அணிகள் மோதின.
இப்போட்டியில் நாணயச்சுழற்சியில் வெற்றிபெற்ற இலங்கை அணி பங்களாதேஷ் அணியை முதலில் துடுப்பெடுத்தாடுமாறு பணித்தது.
அதன்படி முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்களில் 4 விக்கெட்டுகளை இழந்து 171 ஓட்டங்களைப் பெற்றது.
பங்களாதேஷ் அணியில் துடுப்பாட்டத்தில் மொஹமட் நயிம் 62 ஓட்டங்களையும் முஸ்பிகுர் ரஹீம் ஆட்டமிழக்காது 57 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பந்துவீச்சில் இலங்கை அணி சார்பில் சாமிக்க கருணாரத்ன, பினுர பெர்னாண்டோ மற்றும் லகிரு குமார ஆகியோர் தலா ஒவ்வொரு விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இந்நிலையில், 172 என்ற வெற்றி இலக்கை நோக்கி துடுப்பெடுத்தாடிய இலங்கை அணிக்கு ஆரம்பம் அதிர்ச்சி காத்திருந்தது. அணி 2 ஓட்டங்களை பெற்றிருந்தபோது முதலாவது விக்கெட்டுக்காக குசல் பெரேரா ஆட்டமிழந்து வெளியேறினார்.
இந்நிலையில், நிதான ஆட்டத்தை வெளிப்படுத்திய இலங்கை ஒருகட்டத்தில் 79 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.
இதையடுத்து இலங்கை அணியின் சரித் அசலங்க மற்றும் பானுக ராஜபக்ஷ ஆகியோரின் அபார துடுப்பாட்டத்தின் உதவியுடன் 172 என்ற வெற்றி இலக்கை அடைந்து 5 விக்கெட்டுகளால் அபார வெற்றிபெற்றது.
இலங்கை அணி சார்பில் சரித் அசலங்க ஆட்டமிழக்காது 80 ஓட்டங்களையும் பானுக்க ராஜபக்ஷ 53 ஓட்டங்களையும் பெற்றுக்கொடுத்தனர்.
பங்களாதேஷ் அணி சார்பாக பந்துவீச்சில் நசும் அஹமட் மற்றும் சகிப் அல் ஹசன் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளையும் மொஹமட் சைபுதீன் ஒரு விக்கெட்டையும் வீழ்த்தினர்.
இலங்கை அணியின் வெற்றிக்கு முக்கிய காரணமாக இருந்த சரித் அசலங்க ஆட்டநாயகன் விருதை தட்டி சென்றார்.