Photo: Twitter/ICC
டி-20 உலகக் கிண்ணத்தின் சுப்பர் 12 சுற்றின் முதல் போட்டியில் தென்னாபிரிக்க அணியை 5 விக்கெட் வித்தியாசத்தில் அவுஸ்திரேலிய அணி வீழ்த்தியது.
அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அவுஸ்திரேலிய அணி முதலில் களத்தடுப்பை தெரிவு செய்தது.
இதையடுத்து முதலில் களமிறங்கிய தென்னாபிரிக்க அணி 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 118 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது. அந்த அணி சார்பில் எய்டன் மார்க்ரம் 40 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.
அவுஸ்திரேலியாவின் ஆடம் சாம்பா, ஜோஸ் ஹேசில்வுட், மிட்செல் ஸ்டார்க் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து 119 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப வீரரான ஆரோன் பின்ச் டக் அவுட்டானார். அதன் பின்பு டேவிட் வார்னர், மிட்சல் மார்ஷ், கிளென் மெக்ஸ்வெல் ஆகியோர் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்தனர்.
ஆனால் ஸ்டீவ் ஸ்மித் மட்டும் ஓரளவுக்கு நிலைத்து விளையாடி 35 ஓட்டங்கள் எடுத்து ஆட்டமிழந்தார்.
ஆனால், மெத்யூ வேட் மற்றும் மார்கஸ் ஸ்டொய்னிஸ் ஜோடி இறுதி வரை ஆட்டமிழக்காமல் இருந்து அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இறுதியில் அவுஸ்திரேலிய அணி 19.4 ஓவர்களில் 5 விக்கெட்டுகள் இழப்பிற்கு 121 ஓட்டங்கள் எடுத்து 5 விக்கெட் வித்தியாசத்தில் போராடி வெற்றி பெற்றது.