November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகளை வீழ்த்தியது இங்கிலாந்து

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் சுப்பர் 12 சுற்றின் 2 ஆவது போட்டியில் நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள் அணியை 6 விக்கெட் வித்தியாசத்தில் இங்கிலாந்து அணி வீழ்த்தியது.

டி- 20 உலகக் கிண்ணத் தொடரின் 14 ஆவது லீக் போட்டியில் நடப்பு சம்பியன் மேற்கிந்திய தீவுகள் – இங்கிலாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

துபாயில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற இங்கிலாந்து முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய மேற்கிந்திய தீவுகள் அணியானது இங்கிலாந்தின் பந்துவீச்சுக்கு ஈடுகொடுக்க முடியாமல் 55 ஓட்டங்களுக்கு சுருண்டது. டி- 20 கிரிக்கெட் வரலாற்றில் ஒரு அணி எடுத்த 3 ஆவது குறைந்தபட்ச ஓட்ட எண்ணிக்கை இதுவாகும்.

அத்துடன், டி- 20 உலகக் கிண்ண வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் பதிவு செய்த மிகக் குறைந்த மொத்த எண்ணிக்கையும் இதுவாகும்.

மேற்கிந்திய தீவுகள் அணி சார்பாக கிறிஸ் கெயில் மாத்திரம் அதிகபட்சமாக 13 ஓட்டங்களை பெற்றுக் கொள்ள, ஏனைய வீரர்கள் ஒற்றை இலக்கத்துடன் வெளியேறினர்.

இங்கிலாந்து அணி தரப்பில் 2.2 ஓவர்களை வீசிய ஆடில் ரஷீத் 2 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 4 விக்கெட்டுகளை கைப்பற்றி டி- 20 போட்டிகளில் தனது அதிசிறந்த பந்துவீச்சுப் பிரதியைப் பதிவு செய்தார்.

அத்துடன், டைமல் மில்ஸ் மற்றும் மொயின் அலி ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் கைப்பற்றினர்.

அதன்பின் எளிய இலக்கை துரத்திய இங்கிலாந்து அணியும் ஆரம்பத்தில்  விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அந்த அணியின் ஆரம்ப வீரர்களான ஜேசன் ரோய் 11 ஓட்டங்களையும், ஜொன்னி பேர்ஸ்டோவ் 9 ஓட்டங்களையும், மொயின் அலி 3 ஓட்டங்களையும் லியாம் லிவிங்ஸ்டன் ஒரு ஓட்டத்தையும் எடுத்து ஏமாற்றம் அளித்தனர்.

இருப்பினும் மறுமுனையில் நிதான ஆட்டத்தை வெளிப்படுத்தி ஆட்டமிழக்காமல் 24 ஓட்டங்களைப் பெற்றுக்கொண்ட ஜோஸ் பட்லர் அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்து சென்றார்.

இறுதியில் இங்கிலாந்து அணி, 8.2 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 56 ஓட்டங்களை எடுத்தது.

இதன்மூலம் 6 விக்கெட் வித்தியாசத்தில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்திய இங்கிலாந்து அணி, முதல் முறையாக டி- 20 உலகக் கிண்ணப் போட்டிகள் வரலாற்றில் மேற்கிந்திய தீவுகள் அணியை வீழ்த்தி சாதனை படைத்தது.