இலங்கை அணியின் ஆலோசகராக பணியாற்றி வரும் முன்னாள் வீரர் மஹேல ஜயவர்தன, இலங்கை அணியிலிருந்து வெளியேறவுள்ளார்.
டி- 20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்று வருகிறது. இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்தில் தகுதிகாண் சுற்றில் விளையாடி வருகின்ற இலங்கை அணி, நமீபியா, அயர்லாந்து மற்றும் நெதர்லாந்து ஆகிய அணிகளை வீழ்த்தி சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்றது.
இது இவ்வாறிருக்க, டி-20 உலகக் கிண்ணத் தொடரில் இலங்கை அணியின் ஆலோசகராக செயல்பட்டு வருகின்ற மஹேல ஜயவர்தன, நெதர்லாந்து அணிக்கு எதிராக சார்ஜாவில் நடைபெற்ற கடைசி லீக் போட்டியுடன் நாடு திரும்பவுள்ளார். இது பற்றி மஹேல ஜயவர்தன கூறியதாவது:
இது மிகவும் சிரமமானது. இப்போதுதான் எண்ணிப் பார்த்தேன். கடந்த ஜூன் மாதம் முதல் 135 நாட்களாக கொவிட்- 19 கட்டுப்பாட்டு வலயத்தில் உள்ளேன். தற்போது அதிலிருந்து வெளியேறுவதற்கான நேரம் வந்துவிட்டது.
எனினும், தொழில்நுட்பத்தின் உதவியுடன் இலங்கை அணியினருடன் தொடர்பில் இருப்பேன். ஒரு தந்தையாக எனது மகளை பல நாட்களாக பார்க்கவில்லை. இதை யாரும் புரிந்துகொள்ள முடியும் என நினைக்கிறேன். நான் வீட்டுக்கு திரும்ப வேண்டும். நான் ஐ.பி.எல் போட்டியில் பணியாற்றியதால் சார்ஜா மற்றும் இதர மைதானங்களில் எப்படி விளையாட வேண்டும் என்ற திட்டத்தை உருவாக்கித் தருவேன் என்றார்.
முன்னதாக கடந்த ஜூலை மாதம் தி ஹண்ட்ரெட் தொடரில் சம்பியன் பட்டம் வென்ற சதர்ன் பிரேவ்ஸ் அணியின் தலைமை பயிற்சியாளராக மஹேல ஜயவர்தன பணியாற்றினார்.
இந்தப் போட்டியை முடித்துவிட்டு ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு வந்து மும்பை இந்தியன்ஸ் அணியின் பயிற்சியாளராகவும், அதன்பிறகு டி-20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றில் இலங்கை அணியின் ஆலோசகராகவும் பணியாற்றியுள்ளார்.
எவ்வாறாயினும், மஹேல ஜயவர்தனவின் வழிகாட்டலுடன் இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இலங்கை அணியில் பல மாற்றங்கள் செய்யப்பட்டன. இதன் காரணமாக இலங்கை அணி தொடர்ச்சியாக மூன்று போட்டிகளில் வெற்றிகளை பதிவு செய்தமை இங்கு குறிப்பிடத்தக்கது.