Photo: Twitter/ICC
அயர்லாந்து அணிக்கெதிரான உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் நமீபியா அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றிபெற்று, சுப்பர் 12 சுற்றுக்கு நான்காவது அணியாக முன்னேறியது.
டி-20 உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற 11 ஆவது லீக் போட்டியில் அயர்லாந்து – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இப்போட்டியில் நாணய சுழற்சியில் வென்ற அயர்லாந்து அணி முதலில் துடுப்பாட்டத்தை தெரிவு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய அந்த அணியின் ஆரம்ப வீரர்களான கெவின் ஓ பிரையன் (25), போல் ஸ்டெர்லிங் (38), பால்பேர்னி (21) ஆகியோரைத் தவிர மற்ற வீரர்கள் சொற்ப ஓட்டங்களில் ஆட்டமிழந்து வெளியேறினர்.
இதனால் அயர்லாந்து அணி 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுகளை இழந்து 125 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
இதனையடுத்து 126 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய நமீபியா அணி, அணித் தலைவர் கெஹார்ட் எராஸ்மஸின் அரைச்சதத்தின் உதவியால் 18.3 ஓவர்களில் 2 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 126 ஓட்டங்களைப் பெற்று 8 விக்கெட் வித்தியாசத்தில் மிக இலகுவாக வெற்றியீட்டியது.
இதில் அணித் தலைவர் கெஹார்ட் எராஸ்மஸ் 53 ஓட்டங்களையும், டேவிட் வீஸி 28 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காமல் பெற்று அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.
இதன்படி, டி- 20 உலகக் கிண்ணத்தில் முதல் முறையாக பங்கேற்றுள்ள ஐசிசி இன் அங்கத்துவ நாடான நமீபியா அணி, தமது முதல் டி-20 உலகக் கிண்ணத்திலேயே சுப்பர் 12 சுற்றுக்கு தகுதி பெற்று வரலாறு படைத்தது.
இதன்படி, நாளை (23) முதல் ஆரம்பமாகவுள்ள சுப்பர் 12 சுற்றில் இந்தியா, பாகிஸ்தான், ஆப்கானிஸ்தான், நியூசிலாந்து, ஸ்கொட்லாந்து ஆகிய அணிகள் இடம்பெற்றுள்ள முதலாவது குழுவில் விளையாட நமீபியா அணி தகுதி பெற்றது.