Phot: Twitter/ICC
நெதர்லாந்து அணிக்கெதிரான டி- 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் சுற்றுக்கான கடைசி லீக் போட்டியில் இலங்கை அணி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.
டி- 20 உலகக் கிண்ணத் தொடரின் 12 ஆவது லீக் போட்டியில் இலங்கை – நெதர்லாந்து அணிகள் பலப்பரீட்சை நடத்தின. இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.
அதன்படி, முதலில் களமிறங்கிய நெதர்லாந்து அணி வனிந்து ஹஸரங்க, லஹிரு குமார ஆகியோரின் சிறப்பான பந்துவீச்சை எதிர்கொள்ள முடியாமல் 10 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 44 ஓட்டங்களை மாத்திரமே பெற்றுக் கொண்டது.
இலங்கை அணி தரப்பில் லஹிரு குமார, வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.
இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணி 7.1 ஓவர்களிலேயே இலக்கை எட்டி 8 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியைப் பெற்றது.
சிறப்பாக ஆடிய குசல் பெரேரா ஆட்டமிழக்காமல் 33 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.
முதல் சுற்றில் விளையாடிய 3 போட்டியிலும் வென்ற இலங்கை அணி, 6 புள்ளிகளுடன் ‘A’ குழுவில் முதலிடம் பிடித்து, சுப்பர்–12 சுற்றில் ‘குரூப்–1’ பிரிவில் அவுஸ்திரேலியா, இங்கிலாந்து, தென்னாபிரிக்கா, மேற்கிந்திய தீவுகள், பங்களாதேஷ் அணிகளுடன் இடம்பிடித்தது.