January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 உலகக் கிண்ணம்: சுப்பர் 12 சுற்றுக்கு முன்னேறியது பங்களாதேஷ்

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில்  நடைபெற்ற ‘பி’ குழுவிற்கான போட்டியில் பப்புவா நியூ கினியாவை 85 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பங்களாதேஷ் அணி வீழ்த்தியது.

இந்த வெற்றியின் மூலம் இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்தில் இரண்டாவது அணியாக சுப்பர் 12 சுற்றுக்கு பங்களாதேஷ் அணி தகுதி பெற்றது.

7 வது டி- 20 உலகக் கிண்ணத் தொடர் ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் நடைபெற்று வருகிறது. இதில் நடைபெற்ற முதல் சுற்றின் 9 ஆவது லீக் போட்டியில் பங்களாதேஷ் – பப்புவா நியூ கினியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி மஹ்முதுல்லா, சகிப் அல் ஹசன் ஆகியோரது அதிரடியான துடுப்பாட்டத்தால் 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுகளை இழந்து 181 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக அணித் தலைவர் மஹ்முதுல்லா 50 ஓட்டங்களையும், சகிப் அல் ஹசன் 46 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.

பப்புவா நியூ கினியா அணியின் பந்து வீச்சில், கபுவா மோரியா, டேமின் ரவு, அசட் வாலா ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தினர்.

இதையடுத்து கடின இலக்கை நோக்கி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

அதிலும் அந்த அணியில் இருவரை தவிர மற்ற யாரும் இரட்டை இலக்க எண்ணிக்கையை பெற்றுக் கொள்ளவில்லை.

அந்த அணியின் விக்கெட் காப்பாளர் கிப்லின் டொரிகா இறுதிவரை களத்தில் நின்று அதிகபட்சமாக 46 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்றுக் கொடுத்தார்.

இறுதியில் 19.3 ஓவர்களில் அந்த அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 97 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இதன் மூலம் பங்களாதேஷ் அணி 84 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி, சுப்பர் 12 சுற்றுக்குள் நுழைந்தது.

பங்களாதேஷ் அணி தரப்பில் சகிப் அல் ஹசன் 4 விக்கெட்டுகளை வீழ்த்தி ஆட்டநாயகன் விருதை வென்றார்.

டி- 20 உலகக் கிண்ண முதல் சுற்றில் ‘பி’ குழுவில் இடம்பெற்றுள்ள பங்களாதேஷ் புள்ளிப் பட்டியலில் 3 போட்டிகளில் விளையாடி 2 வெற்றிகள் பெற்று 4 புள்ளிகளுடன் முதலிடத்தில் உள்ளது.