January 19, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 உலகக் கிண்ண வரலாற்றில் நமீபியாவுக்கு முதல் வெற்றி

Photo: Twitter/ICC

நெதர்லாந்துக்கு எதிரான டி- 20 உலகக் கிண்ண முதல் சுற்றுப் போட்டியில் 6 விக்கெட் வித்தியாசத்தில் நமீபியா அணி வெற்றியை பதிவு செய்தது.

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் நேற்று (20) நடைபெற்ற முதல் சுற்றின் 7 ஆவது லீக் போட்டியில் நெதர்லாந்து – நமீபியா அணிகள் பலப்பரீட்சை நடத்தின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற நமீபியா அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய நெதர்லாந்து அணி மெக்ஸ் ஓடவுட்டின் அதிரடியான அரைச் சதத்தினால் 20 ஓவர்கள் நிறைவில் 4 விக்கெட்டுகளை இழந்து 164 ஓட்டங்களை எடுத்தது. இதில் அதிகபட்சமாக ஓடவுட் 70 ஓட்டங்களை எடுத்தார்.

இதையடுத்து கடின இலக்கை துரத்திய நமீபியா அணி ஆரம்பத்திலேயே 3 விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

எனினும், டேவிட் வீஸின் அதிரடி ஆட்டத்தால் 19 ஓவர்களிலேயே நமீபியா அணி இலக்கை எட்டி 6 விக்கெட் வித்தியாசத்தில் நெதர்லாந்தை வீழ்த்தி அசத்தியது.

இந்த தோல்வியின் மூலம் நெதர்லாந்து அணி டி- 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை இழந்து தொடரிலிருந்து வெளியேறியது.

அதேபோல, முதல் முறையாக டி- 20 உலகக் கிண்ணத்தில் பங்கேற்றுள்ள நமீபியா அணி, தமது முதல் உலகக் கிண்ண வெற்றியை பதிவு செய்து வரலாறு படைத்தது.

போட்டியின் ஆட்டநாயகனாக நமீபியா அணியின் டேவிட் வீஸ் தெரிவாகினார்.