November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஸ்கொட்லாந்து அணியின் ஜேர்சியை வடிவமைத்த 12 வயது சிறுமி

Photo: Twitter/ Scotland Cricket

டி- 20 உலகக் கிண்ணத்தில் விளையாடி வருகின்ற ஸ்கொட்லாந்து அணியின் ஜேர்சியை ரெபேக்கா டவுனி என்ற 12 வயது சிறுமி வடிவமைத்துள்ளதாக அந்நாட்டு கிரிக்கெட் சபை தெரிவித்துள்ளது.

ஐ.சி.சி. டி-20 ஓவர் உலகக் கிண்ணத் தொடர் கடந்த 17 ஆம் திகதி முதல் ஓமான் மற்றும் ஐக்கிய அரபு இராச்சியத்தில் நடைபெற்று வருகிறது.

இதில் பங்கேற்றுள்ள 8 அணிகள் 2 பிரிவுகளாக பிரிந்து மோதுகின்றன. அதன்படி ‘B’ பிரிவில் ஸ்கொட்லாந்து அணி, பங்களாதேஷ், பப்புவா நியூ கினியா மற்றும் ஓமான் ஆகிய 4 அணிகள் இடம்பெற்றுள்ளன.

இதில் முதல் போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ஓட்டங்களால் வீழ்த்திய ஸ்கொட்லாந்து அணி,  2ஆவது போட்டியில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி சுப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை அதிகரித்துக் கொண்டது.

எனவே, இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்தில் இரண்டு போட்டிகளில் விளையாடி இரண்டிலும் வெற்றி பெற்றுள்ள ஸ்கொட்லாந்து அணி, மற்றொரு விடயத்திலும் அனைவரின் கவனத்தையும் ஈர்த்துள்ளது.

அது அந்த அணி வீரர்கள் அணிந்திருக்கும் ஜேர்சியாகும். அந்த ஜேர்சியில் ஊதா மற்றும் கருப்பு நிற பட்டைகளைக் கொண்ட வடிவமைப்புடன், ஸ்கொட்லாந்து நாட்டின் பெயர் முன்பக்கத்தில் அச்சிடப்பட்டுள்ளது. கண்களை கவரும் வகையில் அமைந்திருக்கும் அந்த ஜேர்சியானது அனைவரது கவனத்தை ஈர்த்துள்ளது.

இந்த நிலையில், தற்போது இந்த ஜேர்சியை வடிவமைத்தவர் குறித்த ருசிகர தகவலை ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை வெளியிட்டுள்ளது.

இது தொடர்பாக ஸ்கொட்லாந்து கிரிக்கெட்டின் டுவிட்டர் பக்கத்தில் வெளியிடப்பட்டுள்ள பதிவில், அவர்களது ஜேர்சியை வடிவமைத்தவர், ஹேடிங்டனைச் சேர்ந்த ரெபேக்கா டவுனி என்ற 12 வயது சிறுமி என்று தெரிவிக்கப்பட்டுள்ளது.

முன்னதாக ஜேர்சி வடிவமைப்பு தொடர்பாக ஸ்கொட்லாந்து கிரிக்கெட் சபை போட்டி ஒன்றை நடத்தியது.

சுமார் 200 பாடசாலை மாணவர்கள் கலந்து கொண்ட இந்தப் போட்டியில், ரெபேக்கா டவுனி வடிவமைத்த ஜேர்சி தேர்வு செய்யப்பட்டது.

ஸ்கொட்லாந்தின் தேசிய சின்னத்தில் உள்ள ‘திஸ்சில்’ எனப்படும் செடியின் நிறங்களை அடிப்படையாகக் கொண்டு இந்த ஜேர்சியை அவர் வடிவமைத்துள்ளார். அவரது வடிவமைப்பில் தயாரான முதல் ஜேர்சி, அவருக்கே பரிசாகவும் வழங்கப்பட்டிருக்கிறது.