November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 உலகக் கிண்ணம்: பப்புவா நியூ கினியா அணி வெளியேறியது

Photo: Twitter/ICC

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் முதல் சுற்று குழு B யில் விளையாடிய பப்புவா நியூ கினியா அணி, முதல் அணியாக இம்முறை டி- 20 உலகக் கிண்ணத் தொடரிலிருந்து வெளியேறியது.

டி- 20 உலகக் கிண்ணத் தொடரில் நடைபெற்ற தகுதிகாண் சுற்றின் 5 ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்து – பப்புவா நியூ கினியா அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்று முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி ரிச்சி பெர்ரிங்டனின் அதிரடியான ஆட்டத்தினால் 20 ஓவர்கள் நிறைவில் 9 விக்கெட்டுகளை இழந்து 165 ஓட்டங்களை எடுத்தது.

இதில் அதிகபட்சமாக ரிச்சி பெர்ரிங்டன் 70 ஓட்டங்களை பெற்றுக் கொண்டார்.

புந்துசீச்சில் கபுவா மோரியா 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.

இதையடுத்து களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி ஆரம்பம் முதலே எதிரணி பந்துவீச்சை சமாளிக்க முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து தடுமாறியது.

இதனால் 19.3 ஓவர்கள் முடிவில் பப்புவா நியூ கினியா அணி அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 148 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

ஸ்கொட்லாந்து சார்பில் ஜோஸுவா டேவி 18 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன்மூலம் ஸ்கொட்லாந்து அணி 17 ஓட்டங்கள் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியா அணியை வீழ்த்தி, சுப்பர் 12 சுற்றுக்கான வாய்ப்பை பிரகாசப்படுத்தியது.

ஆட்டநாயகன் விருது ஸ்கொட்லாந்தின் ரிச்சி பெர்ரிங்டனுக்கு அளிக்கப்பட்டது.

இது இவ்வாறிருக்க, ஓமான் மற்றும் ஸ்கொட்லாந்து அணிகளுடன் முதல் இரண்டு போட்டிகளிலும் தோல்வியடைந்த பப்புவா நியூ கினியா அணி, இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்திலிருந்து முதல் அணியாக வெளியேறியது.

இதேநேரம், அடுத்த ஆண்டு  அவுஸ்திரேலியாவில் நடைபெறவுள்ள டி- 20 உலகக் கிண்ணத் தொடரின் தகுதிகாண் போட்டிகளில் விளையாடும் சந்தர்ப்பம் பப்புவா நியூ கினியா அணிக்கு கிட்டவுள்ளது.