October 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: நமீபியாவை 7 விக்கெட்டுகளால் வீழ்த்தியது இலங்கை

Photo: Twitter/ICC

நமீபியா அணிக்கெதிரான டி- 20 உலகக் கிண்ண தகுதிகாண் சுற்றுப் போட்டியில் இலங்கை அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் வெற்றி பெற்றது.

டி-20 உலகக் கிண்ணத் தொடரில் அபுதாபியில் நடைபெற்ற முதல் சுற்றின் 4 ஆவது தகுதிகாண் போட்டியில் இலங்கை – நமீபியா அணிகள் மோதின.

இதில் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பில் ஈடுபட தீர்மானித்தது.

அதன்படி முதலில் களமிறங்கிய நமீபியா அணி, மஹீஷ் தீக்ஷன மற்றும் வனிந்து ஹஸரங்கவின் பந்து வீச்சை எதிர்கொள்ள முடியாமல் அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தது.

இதனால் அந்த அணி 19.3 ஓவர்களிலேயே அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 96 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.

இலங்கை அணியின் பந்து வீச்சு சார்பில் மகீஷ் தீக்ஷன 25 ஓட்டங்களுக்கு 3 விக்கெட்டுகளை வீழ்த்த, லஹிரு குமார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகியோர் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தமை குறிப்பிடத்தக்கது.

இதையடுத்து எளிய இலக்கை துரத்திய இலங்கை அணியில் பெதும் நிஸ்ஸங்க (5), குசல் பெரேரா (11), தினேஷ் சந்திமால் (5) என அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்தனர்.

அதன்பின் ஜோடி சேர்ந்த அவிஷ்க பெர்னாண்டோ – பானுக ராஜபக்ஷ ஆகிய இருவரும் அதிரடியாக விளையாடி அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன் மூலம் 13.3 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 100 ஓட்டங்களை எடுத்து 7 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி வெற்றி பெற்றது.

இதில் பானுக ராஜபக்ஷ 42 ஓட்டங்களுடனும், அவிஷ்க பெர்னாண்டோ 30 ஓட்டங்களுடனும் ஆட்டமிழக்காமல் இருந்தனர்.

இதனிடையே, போட்டியின் ஆட்டநாயகன் விருதை மஹீஷ் தீக்ஷன பெற்றுக் கொண்டார்.

இது இவ்வாறிருக்க, டி- 20 உலகக் கிண்ண சுப்பர் 12 சுற்றுக்கான தகுதி பெறுவதற்கான புள்ளிப்பட்டியலில், ஏ குழுவின் முதலிடத்தை 2 புள்ளிகளுடன் இலங்கை அணி தக்க வைத்துள்ளதுடன், அயர்லாந்து அணி அதே 2 புள்ளிகளுடன் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.

இலங்கை அணி, இரண்டாவது தகுதிகாண் போட்டியில் எதிர்வரும் 20 ஆம் திகதி அயர்லாந்தை சந்திக்கவுள்ளது.