Photo: Twitter/ICC
டி- 20 உலகக் கிண்ணத்தில் நெதர்லாந்து அணிக்கு எதிரான போட்டியில் அயர்லாந்து அணியின் கேர்டிஸ் கேம்பர் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகள் வீழ்த்தி சாதனை படைத்துள்ளார்.
டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் முதல் சுற்றின் மூன்றாவது போட்டியில் அயர்லாந்து – நெதர்லாந்து அணிகள் மோதின.
அபுதாபியில் நடைபெற்ற இப்போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய நெதர்லாந்து அணி, 20 ஓவர்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்து 106 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது.
துடுப்பாட்டத்தில் நெதர்லாந்து அணி சார்பில் அதிகபட்சமாக மெக்ஸ் ஓடவுட் 47 பந்துகளில் 51 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டார்.
அயர்லாந்து அணி தரப்பில் கேர்டிஸ் கேம்பர் 26 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளைக் கைப்பற்றி புதிய சாதனை படைத்தார்.
22 வயதான வலது கை வேகப்பந்து வீச்சாளரான கேர்டிஸ் கேம்பர், போட்டியின் 10-வது ஓவரை வீசினார்.
அதில் கொலின் அக்கெர்மென் (11), ரயன் டென் டஸ்கட்டே (0), ஸ்கொட் எட்வர்ட்ஸ் (0) மற்றும் ரோலொப் வேன்டர் மெர்லி (0) ஆகியோரை அடுத்தடுத்த பந்துகளில் வீழ்த்தி அசத்தினார்.
இதன்மூலம் ஒரே ஓவரில் தொடர்ந்து நான்கு விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர்களின் பட்டியலில் லசித் மாலிங்க மற்றும் ரஷித் கானுடன் தற்போது கேர்டிஸ் கேம்பரும் மூன்றாவது வீரராக இணைந்து கொண்டார்.
இந்த சாதனையை மாலிங்க இரண்டு தடவைகள் நிகழ்த்தியுள்ளார். தென்னாபிரிக்காவுக்கு எதிராக 2007 டி- 20 உலகக் கிண்ணத்திலும், 2019 ஆம் ஆண்டு பல்லேகலேயில் நியூசிலாந்துக்கு எதிரான டி- 20 போட்டியில் 4 பந்துகளில் 4 விக்கெட்டுகளையும் வீழ்த்தி சாதனை படைத்திருந்தார்.
அதேபோல, ஆப்கானிஸ்தான் வீரர் ரஷித் கானும் 2019 இல் அயர்லாந்துக்கு எதிரான போட்டியில் நான்கு பந்துகளில் நான்கு விக்கெட்டுகளை வீழ்த்தியது குறிப்பிடத்தக்கது.
அதுமாத்திரமின்றி, டி- 20 உலகக் கிண்ணத்தில் ஹெட்ரிக் விக்கெட் வீழ்த்திய வீரர்கள் பட்டியலில் அவுஸ்திரேலிய வீரர் பிரெட் லீக்கு அடுத்தபடியாக இரண்டாவது இடத்தையும் அவர் பெற்றுக் கொண்டார்.
இதனிடையே, குறித்த போட்டியில் 107 ஓட்டங்கள் என்ற எளிய இலக்கை நோக்கி களமிறங்கிய அயர்லாந்து அணி, 15.1 ஓவர்களில் 3 விக்கெட் இழப்பிற்கு 107 ஓட்டங்களை எடுத்து வெற்றியீட்டியது.
அயர்லாந்து அணியின் துடுப்பாட்டத்தில் கரென் டெலனி 44 ஓட்டங்களையும் போல் ஸ்டெர்லிங் 30 ஓட்டங்களையும் பெற்றுக் கொண்டனர்.
இதன்படி, அயர்லாந்து அணி 7 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது.
போட்டியின் ஆட்டநாயகன் விருது கேர்டிஸ் கேம்பருக்கு வழங்கப்பட்டது.