January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்: சகிப் அல் ஹசன் புதிய சாதனை

Photo: ICC/Twitter

சர்வதேச டி- 20 கிரிக்கெட் போட்டியில் அதிக விக்கெட்டுகளை கைப்பற்றிய லசித் மாலிங்கவின் சாதனையை பங்களாதேஷ் வீரர் சகிப் அல் ஹசன் முறியடித்துள்ளார்.

அத்துடன், டி- 20 கிரிக்கெட் போட்டிகளில் 100 க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000 க்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையையும் அவர் பெற்றுக் கொண்டார்.

டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடரின் 7 ஆவது சீசன் நேற்று (17) ஓமானில் ஆரம்பமாகியது.

இதில் முதல் சுற்றின் B குழுவுக்கான இரண்டாவது போட்டியில் பங்களாதேஷ் அணியை 6 ஓட்டங்களால் ஸ்கொட்லாந்து அணி வீழ்த்தியது.

இந்தப் போட்டியில் முதலில் துடுப்பெடுத்தாடிய ஸ்கொட்லாந்து அணி, 20 ஓவர்களில் 9 விக்கெட்டுக்களை இழந்து 140 ஓட்டங்களை பெற்றது.

பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்களில் 7 விக்கெட்டுகளை இழந்து 134 ஓட்டங்களைப் பெற்று தோல்வி அடைந்தது.

இந்தப் போட்டியில் பங்களாதேஷ் அணியின் நட்சத்திர வீரரான சகிப் அல் ஹசன் 4 ஓவர்கள் பந்து வீசி 17 ஓட்டங்களை மட்டுமே விட்டுக் கொடுத்து 2 விக்கெட்டுகளைக் கைப்பற்றினார்.

இதன் மூலம் டி- 20 கிரிக்கெட்டில் அதிக விக்கெட்டுக்கள் வீழ்த்தியவர் என்ற லசித் மாலிங்கவின் 107 விக்கெட் சாதனையை சகிப் அல் ஹசன் முறியடித்தார்.

இதுவரை மொத்தம் 89 டி- 20 போட்டிகளில் விளையாடி உள்ள சகிப் அல் ஹசன், மொத்தம் 108 விக்கெட்டுகளைக் கைப்பற்றி உள்ளார். மாலிங்க 107 விக்கெட்டுக்களுடன் இரண்டாவது இடத்தில் உள்ளார்.

இந்த சாதனைப் பட்டியலில் நியூசிலாந்தின் டிம் சவுதி 3 ஆவது இடத்திலும் (99 விக்கெட்), பாகிஸ்தானின் சஹிட் அப்ரிடி 4 ஆவது இடத்திலும் (98 விக்கெட்), ஆப்கானிஸ்தானின் ரஷித் கான் 5 ஆவது இடத்திலும் (95 விக்கெட்) உள்ளனர்.

மேலும், டி- 20 கிரிக்கெட் போட்டிகளில் 100 க்கும் அதிகமான விக்கெட் மற்றும் 1000 இற்கும் அதிகமான ஓட்டங்கள் எடுத்த ஒரே வீரர் என்ற பெருமையை சகிப் அல் ஹசன் பெற்றுக் கொண்டார்.