Photo: Twitter/ Indian Football Team
தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடரின் இறுதிப் போட்டியில் நேபாளத்தை வீழ்த்தி இந்திய அணி சம்பியன் பட்டத்தை வென்றது.
ஐந்து அணிகள் இடையிலான 13 ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப் தொடர் மாலைதீவுகளில் நடைபெற்றது. இதில் சனிக்கிழமை இரவு நடைபெற்ற இறுதிப் போட்டியில் இந்திய அணி, நேபாள அணியை எதிர்கொண்டது.
போட்டி ஆரம்பித்தது முதல் மழை பெய்ய இரு அணி வீரர்களும் தடுமாறினர். இதனால் முதல் பாதி ஆட்டம் கோல் இன்றி நிறைவுக்கு வந்தது.
இரண்டாவது பாதி ஆரம்பமாகி 3 ஆவது நிமிடத்தில் கோடல் கொடுத்த பந்தை பெற்ற இந்தியாவின் சுனில் சேத்ரி (48வது), அதை கோலாக மாற்றி அசத்தினர். அடுத்த நிமிடத்தில் இந்தியாவின் மொஹமட் யாசிர் கொடுத்த பந்து பரிமாற்றத்தை வாங்கிய சுரேஷ் சிங், தன் பங்கிற்கு ஒரு கோல் அடித்தார்.
மறுபுறத்தில் நேபாள அணி தரப்பில் அடுத்தடுத்து நான்கு மாற்று வீரர்கள் களமிறங்கி போராடினர்.
இதனிடையே, போட்டியின் உபாதையீடு நேரத்தில் இந்திய வீரர் சகால் சமத் ஒரு கோல் அடித்தார்.
இறுதியில் இந்தியா 3–0 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்று 8 ஆவது தடவையாக தெற்காசிய கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்றெடுத்தது.
முன்னதாக இந்திய அணி 1993, 1997, 1999, 2005, 2009, 2011 மற்றும் 2015 ஆம் ஆண்டுகளில் தெற்காசிய கால்பந்து சம்பியன் பட்டத்தை வென்றமை குறிப்பிடத்தக்கது.