July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: முதல் போட்டியில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தியது ஓமான்

Photo: Twitter/ICC

பப்புவா நியூ கினியா அணிக்கெதிரான டி-20 உலகக் கிண்ண தொடரின் தகுதிகாண் சுற்றின் முதல் போட்டியில் ஓமான் அணி 10 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றியீட்டியது.

ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமான் நாடுகளில் நடத்தப்படும் 16 நாடுகள் பங்குகொண்டுள்ள ஐசிசியின் 7 ஆவது டி20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் ஞாயிற்றுக்கிழமை ஆரம்பமாகியது.

இதில் முதலாவதாக எட்டு அணிகள் பங்குபற்றுகின்ற தகுதிகாண் சுற்றுப் போட்டியில் ஓமான் – பப்புவா நியூ கினியா அணிகள் முதல் போட்டியில் மோதின.

ஓமானின் மஸ்கட் நகரில் நடைபெற்ற இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற ஓமான் அணி முதலில் பந்துவீச தீர்மானித்தது.

அதன்படி களமிறங்கிய பப்புவா நியூ கினியா அணி, நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் முடிவில் 9 விக்கெட்டுக்களை இழந்து 129 ஓட்டங்களை எடுத்தது.

அந்த அணி சார்பில் அணித்தலைவர் அசாத் வாலா 57 ஓட்டங்களையும், சார்ள்ஸ் எமினி, 37 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

ஓமான் அணி தரப்பில் அணித்தலைவர் ஷீஸான் மக்சூத், 4 ஓவர்கள் பந்துவீசி 20 ஓட்டங்களுக்கு 4 விக்கெட்டுகளை வீழ்த்த, பிலால் கான் மற்றும் கலீமுல்லாஹ் ஆகிய இருவரும் தலா 2 விக்கெட் வீதம் வீழ்த்தியிருந்தனர்.

இதையடுத்து 130 ஓட்டங்கள் எடுத்தால் வெற்றி என்ற இலக்குடன் களமிறங்கிய ஓமான் அணி, 13.4 ஓவர்களிலேயே வெற்றி இலக்கை எட்டி 10 விக்கெட் வித்தியாசத்தில் பப்புவா நியூ கினியாவை வீழ்த்தி அபார வெற்றியைப் பெற்றது.

இதில் இறுதிவரை ஆட்டமிழக்காமல் இருந்த ஜதிந்தர் சிங் 42 பந்துகளில் 73 ஓட்டங்களையும், ஆகிப் இலியாஸ் 43 பந்துகளில் 50 ஓட்டங்களையும் எடுத்தனர்.

போட்டியின் ஆட்டநாயகன் விருதை பந்துவீச்சில் மிரட்டிய ஓமான் அணித்தலைவர் ஷPஸான் மக்சூத் பெற்றுக்கொண்டார்.

இதேவேளை, ஓமான் அணி, தமது 2ஆவது போட்டியில் பங்களாதேஷ் அணியையும், பப்புவா நியூகினியா அணி, தமது 2ஆவது போட்டியில் ஸ்கொட்லாந்து அணியையும் எதிர்வரும் 19ஆம் திகதி சந்திக்கவுள்ளது.