October 6, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சன்ரைசஸின் வெற்றியைப் பறித்தெடுத்த பஞ்சாப்

(photo:BCCI/IPL)

ஐ.பி.எல் இருபது20 கிரிக்கெட் தொடரில் சன்ரைசஸ் ஹைதராபாத்திடம் முதல் ஆட்டத்தில் அடைந்த தோல்விக்கு இன்று கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி பதிலடி கொடுத்தது. அத்துடன். இவ்வருடம் தொடர்ச்சியாக நான்கு ஆட்டங்களில் வெற்றிபெற்ற அணி என்ற சிறப்பையும் பஞ்சாப் அணி பெற்றது.

துபாயில் நடைபெற்ற இன்றைய ஆட்டத்தில் முதலில் துடுப்பெடுத்தாடிய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி வழமைக்கு மாறாக குறைந்த ஓட்டங்களுக்கு அடுத்தடுத்து விக்கெட்டுகளை இழந்து கடும் சிரமத்துக்குள்ளானது.

அணித்தலைவர் லேகேஷ் 27 ஓட்டங்களுடனும், அதிரடி துடுப்பாட்ட வீரர் கிறிஸ் கெய்ல் 20 ஓட்டங்களுடனும் ஆட்டமிழந்து அணிக்கும், ரசிகர்களுக்கும் பெரும் ஏமாற்றமளித்தார்கள்.

பொறுமையுடன் துடுப்பெடுத்தாடிய நிகோலஸ் பூரான் 32 ஓட்டங்களை ஆட்டமிழக்காமல் பெற்று பஞ்சாப் அணி 100 ஓட்டங்களைக் கடக்க வழிசெய்தார். மந்தீப் சிங் 17 ஓட்டங்களையும், கிளென் மெக்ஸ்வெல் 12 ஓட்டங்களையும் பெற பஞ்சாப் அணி 20 ஓவர்களில் 7 விக்கெட் இழப்புக்கு 126 ஓட்டங்களைப் பெற்றது.

சந்தீப் சர்மா, ஜேஸன் ஹோல்டர், ரஸிட் கான் ஆகியோர் தலா 2 விக்கெட்டுகளை வீழ்த்தி தமது அணியின் வெற்றிப் பாதையை இலகுவாக்கிக்கொடுத்தனர்.

இலகுவான இலக்கான 127 ஓட்டங்களை நோக்கி களமிறங்கிய சன்ரைசஸ் ஹைதராபாத் சார்பாக அணித்தலைவர் டேவிட் வோனர் மற்றும் ஜொனி பெயார்ஸ்டோ ஜோடி முதல் விக்கெட்டுக்காக 6.2 ஓவர்களில் 56 ஓட்டங்களைப் பகிர்ந்து அணியை பலப்படுத்தியது.

அணித்தலைவர் டேவிட் வோனர் 35 ஓட்டங்களுடனும், ஜொனி பெயார்ஸ்டோ 19 ஓட்டங்களுனும், மனிஷ் பாண்டே 15 ஓட்டங்களுடனும் வெளியேறினர். சன்ரைசஸ் அணி 16.1 ஓவர்களில் 100 ஓட்டங்களுக்கு நான்கு விக்கெட்டுகளை இழந்தாலும் விஜய் சங்கர் போராடி 26 ஓட்டங்களைப் பெற்றுக்கொடுக்க சன்ரைசஸ் அணி வெற்றிபெற 13 பந்துகளில் 17 ஓட்டங்களே தேவைப்பட்டது.

ஆனாலும், அடுத்த 5 விக்கெட்டுகளையும் வெறும் 4 ஓட்டங்களுக்கு வீழ்த்திய பஞ்சாப் அணியின் பந்துவீச்சாளர்கள் வெற்றியைப் பறித்தெடுத்தனர். சன்ரைசஸின் துடுப்பாட்டம் 19.5 ஓவர்களில் 114 ஓட்டங்களுடன் முடிந்தது.

இதற்கமைய கிங்ஸ் இலவன் பஞ்சாப் அணி 12 ஓட்டங்களால் மெய்சிலிர்க்க வைக்கும் வெற்றியை ஈட்டியது. அர்ஸ்தீப் சிங், கிறிஸ் ஜோர்தான் ஆகியோர் தலா 3 விக்கெட்டுகளை வீழ்த்தி வெற்றிக்கு அடித்தளமிட்டனர். இது பஞ்சாப் அணி பெற்ற ஐந்தாவது வெற்றியாகும்.

தலா 11 ஆட்டங்களில் பங்கேற்றுள்ள பஞ்சாப் அணி 10 புள்ளிகளுடன் ஐந்தாமிடத்திலும், சன்ரைசஸ் அணி 8 புள்ளிகளுடன் ஆறாமிடத்திலும் உள்ளன.