January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

“டி-20 உலகக் கிண்ணத்தில் இந்தியாவை வீழ்த்துவோம்”; பாபர் அசாம்

Photo: Facebook/ PCB

டி- 20 உலகக் கிண்ணத்தில் இந்திய அணியை தோற்கடிப்போம் என்று பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் தெரிவித்துள்ளார்.

டி- 20 உலகக் கிண்ணத் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியத்தில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், கிரிக்கெட் உலகமே ஆவலுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்ற பாகிஸ்தான் – இந்திய அணிகள் மோதும் போட்டி எதிர்வரும் 24 ஆம் திகதி நடைபெறவுள்ளது.

இதில் சிறப்பம்சம் என்னவெனில், இதுவரை நடைபெற்ற உலகக் கிண்ணப் போட்டிகளில் இந்திய அணியை பாகிஸ்தான் வென்றதாக வரலாறு கிடையாது.

ஆகவே, இந்த முறை நடைபெறவுள்ள இந்தியா, பாகிஸ்தான் அணிகளுக்கு இடையிலான போட்டியானது உலகம் முழுவதிலும் உள்ள கிரிக்கெட் ரசிகர்களின் எதிர்பார்ப்பை அதிகரிக்கச் செய்துள்ளது.

இந்த நிலையில், ஐக்கிய அரபு இராச்சியத்துக்கு பாகிஸ்தான் அணி புறப்பட்டுச் செல்ல முன் லாகூரில் இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் பாகிஸ்தான் அணித் தலைவர் பாபர் அசாம் கலந்து கொண்டார். இதில் இந்தியாவுடனான போட்டி தொடர்பில் அவர் கருத்து தெரிவிக்கையில்,

ஐக்கிய அரபு இராச்சியத்தில் நாங்கள் 3 – 4 ஆண்டுகளாக கிரிக்கெட் விளையாடி வருகிறோம். அதனால் அங்குள்ள ஆடுகளத்தின் தன்மை எங்களுக்கு நன்கு பழக்கப்பட்டது. ஆடுகளங்கள் ஒவ்வொரு போட்டிக்கும் எவ்வாறு மாறுபடும், அதற்கு ஏற்றாற்போல் துடுப்பாட்ட வீரர்கள் தங்களை மாற்றிக்கொள்ள வேண்டும் என்பது குறித்தும் நன்கு தெரியும்

அதுமாத்திரமன்றி, போட்டி நடைபெறுகின்ற நாளில் யார் சிறப்பாக விளையாடுகிறார்களோ அந்த அணி வெல்லும். என்னிடம் கேட்டால், இந்தியாவுடனான போட்டியில் நாங்கள்தான் வெல்வோம். இந்த முறை இந்திய அணியைத் தோற்கடிப்போம் என தெரிவித்தார்.