July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணம்: பபுவா நியூ கினியாவுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கைக்கு வெற்றி

photo: Twitter/Sri Lanka Cricket

டி-20 உலகக் கிண்ணத்தில் இன்று நடைபெற்ற பபுவா நியூ கினியா அணியுடனான பயிற்சிப் போட்டியில் இலங்கை அணி 39 ஓட்டங்களால் இலகு வெற்றியைப் பதிவுசெய்தது.

அபுதாபியில் நடைபெற்ற இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்று முதலில் துடுப்பாடிய இலங்கை அணி 20 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுக்களை இழந்து 162 ஓட்டங்களைப் பெற்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டம் சார்பில் ஆரம்பவீரராக களமிறங்கிய பெதும் நிஸ்ஸங்க, 76 ஓட்டங்களையும் அவிஷ்க பெர்னாண்டோ, 61 ஓட்டங்களையும் அதிகபட்சமாகப் பெற்றுக்கொண்டனர்.

பபுவா நியூ கினியா அணியின் பந்துவீச்சு சார்பில் கபுவா, 4 விக்கெட்டுக்களை வீழ்த்தினார்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 164 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய பபுவா நியூ கினியா அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்களை இழந்து 123 ஓட்டங்களை மாத்திரம் பெற்று போட்டியில் தோல்வியைத் தழுவியது.

பபுவா நியூ கினியா அணியின் துடுப்பாட்டம் சார்பில் அதன் அணித்தலைவர் அஸ்ஸாத் வாலா, 51 ஓட்டங்களை அதிகபட்சமாக எடுத்தார்.

இலங்கை அணியின் பந்துவீச்சு சார்பில் வனிந்து ஹஸரங்க மற்றும் துஷ்மந்த சமீர ஆகியோர் தலா 2 விக்கெட்டுக்கள் வீதம் வீழ்த்தினர்.

இந்த வெற்றியோடு இலங்கை கிரிக்கெட் அணி டி-20 உலகக் கிண்ணத்திற்கான பயிற்சிப் போட்டிகள் இரண்டிலும் வெற்றியீட்டியுள்ளது.

இதேவேளை, டி-20 உலகக் கிண்ணத்திற்கான தமது முதல் போட்டியில் எதிர்வரும் 18 ஆம் திகதி நமீபியாவினை எதிர்கொள்கின்றது.