January 18, 2025

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

சர்வதேச கால்பந்து கோல்கள்: பீலேவின் சாதனையை முறியடித்தார் சுனில் சேத்ரி

Photo: Facebook/Indian Football Team 

தெற்காசிய கால்பந்து தொடரில் மாலைதீவுகள் அணிக்கெதிராக 2 கோல்களை அடித்ததன் மூலம் சர்வதேச கால்பந்து போட்டிகளில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை இந்திய வீரர் சுனில் சேத்ரி முறியடித்தார்.

மாலைதீவுகளின் மாலே விளையாட்டரங்கில் நடைபெற்ற தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப்பின் கடைசி லீக் போட்டியில் மாலைதீவுகளை 3 – 1 என்ற கோல்கள் கணக்கில் இலகுவாக வெற்றி கொண்ட இந்தியா, இறுதிப் போட்டியில் விளையாட தகுதி பெற்றது.

இப் போட்டியில் 2 கோல்களைப் போட்ட இந்திய அணித் தலைவர் சுனில் சேத்ரி, சர்வதேச போட்டிகளில் பிரேசில் ஜாம்பவான் பீலேவின் 77 சர்வதேச கோல்கள் என்ற சாதனையை முறியடித்தார்.

124 ஆவது சர்வதேச கால்பந்து போட்டியில் விளையாடிய சுனில் சேத்ரி, 2 கோல்களைப் போட்டு தனது சர்வதேச கோல் எண்ணிக்கையை 79 ஆக உயர்த்திக் கொண்டார்.

தேசிய அணிக்காக அதிக கோல் அடித்த தற்போதுள்ள வீரர்களில் கிறிஸ்டியானோ ரொனால்டோ (112), மெஸ்ஸிக்கு (80) முதலிரண்டு இடங்களில் உள்ளனர்.

இந்த நிலையில் 79 கோல்களுடன் இந்திய வீரர் சுனில் சேத்ரி மூன்றாவது இடத்தைப் பெற்றுக் கொண்டார்.

இதில் தேசிய அணிக்காக அதிக கோல்கள் அடித்த வீரர்களில் 77 கோல்களுடன் மூன்றாவது இடத்தில் இருந்த பிரேசில் ஜாம்பவான் பீலேவின் சாதனையை அவர் முறியடித்தமை குறிப்பிடத்தக்கது.

இது இவ்வாறிருக்க, இம்முறை தெற்காசிய கால்பந்து தொடரின் லீக் சுற்றில் 4 போட்டியில் 2 வெற்றி, 2 சமநிலை என  8 புள்ளிகளுடன் முதலிடம் பிடித்த இந்தியா இறுதிப் போட்டிக்கு முன்னேறியது.

நேபாளம் அணி 7 புள்ளிகளுடன் 2 வது இடம்பிடித்து முதல் முறையாக இறுதிப் போட்டிக்கு தகுதி பெற்றது.

இதன்படி, எதிர்வரும் 16 ஆம் திகதி நடைபெறவுள்ள இறுதிப் போட்டியில் இந்தியா, நேபாளம் அணிகள் மோதுகின்றன.