July 8, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

குசல், டிக்வெல்ல, குணதிலக்கவுக்கு உள்ளூர் போட்டிகளில் விளையாட அனுமதி

இலங்கை அணியின் குசல் மெண்டிஸ், நிரோஷன் டிக்வெல்ல மற்றும் தனுஷ்க குணதிலக்க ஆகியோருக்கு விதிக்கப்பட்டிருந்த உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

எனினும், குறித்த மூன்று வீரர்களுக்கும் விதிக்கப்பட்ட ஒரு கோடி ரூபா அபாரதத்தை செலுத்தினால் மாத்திரமே உள்ளூர் போட்டிகளில் விளையாட முடியும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஜூலை மாதம் நடைபெற்ற இங்கிலாந்து தொடரின் போது, கொவிட்- 19 கட்டுப்பாட்டு வலய விதிமுறையை மீறிய குற்றச்சாட்டுக்காக, குறித்த 3 வீரர்களுக்கும் சர்வதேச கிரிக்கெட்டில் விளையாடுவதற்கு ஒருவருட போட்டித் தடை மற்றும் உள்ளூர் போட்டிகளில் விளையாட 6 மாத போட்டித் தடையும் விதிக்கப்பட்டதுடன், 10 மில்லியன் ரூபா (ஒரு கோடி) அபராதமும் விதிக்கப்பட்டது.

எனினும், உள்ளூர் போட்டிகளில் விளையாடுவதற்கான தடை எதிர்வரும் டிசம்பர் மாதம் நிறைவுக்கு வரும் நிலையில், குறித்த காலப்பகுதிக்கு முன்னர் போட்டித் தடையை நீக்குவதற்கு இலங்கை கிரிக்கெட் சபை தீர்மானித்துள்ளது.

குறித்த இந்த தீர்மானம், இலங்கை கிரிக்கெட் சபையின் முகாமைத்துவ உறுப்பினர்களுக்கு இடையில் இடம்பெற்ற சந்திப்பின் போதே, மேற்கொள்ளப்பட்டுள்ளது.

எனவே, குறித்த மூன்று வீரர்கள் மூவருக்கும் இம்மாதம் 27 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ள உள்ளூர் கழக மட்ட ஒருநாள் தொடரில் விளையாட முடியும் என்பதுடன், எதிர்வரும் டிசம்பர் மாதம் நடைபெறவுள்ள லங்கா பிரீமியர் லீக்கில் விளையாடுகின்ற வாய்ப்பை தவறவிடுவார்கள்.