Photo: Twiiter/BCCI
டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியில் இருந்து அக்ஷர் பட்டேல் நீக்கப்பட்டு அவருக்குப் பதிலாக ஷர்துல் தாகூர் சேர்க்கப்பட்டுள்ளார்.
டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் எதிர்வரும் 17 ஆம் திகதி ஆரம்பமாகவுள்ளது. இந்தத் தொடர் ஆரம்பமாக இன்னும் சில தினங்களே உள்ளதால் ஒவ்வொரு அணியும் டி- 20 உலகக் கிண்ணத்துக்கான 15 பேர் கொண்ட இறுதிக் குழாத்தை அறிவித்து வருகின்றன.
இந்த நிலையில், இந்திய கிரிக்கெட் அணியும் டி- 20 உலகக் கிண்ணத்துக்கான இந்திய அணியின் இறுதிக் குழாம் விபரத்தை நேற்று (13) வெளியிட்டுள்ளது.
இதில் சுழல்பந்து வீச்சு சகல துறை வீரர் அக்ஷர் பட்டேல் மேலதிக வீரர்கள் பட்டியலுக்கு மாற்றப்பட்டுள்ளார்.
அவருக்குப் பதிலாக மேலதிக வீரர்கள் பட்டியலில் பெயரிடப்பட்டிருந்த வேகப்பந்து வீச்சு சகலதுறை வீரர் ஷர்துல் தாகூர் 15 பேர் கொண்ட பிரதான அணியில் சேர்க்கப்பட்டுள்ளார்.
இவர் இம்முறை ஐ.பி.எல் தொடரில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணிக்காக 14 போட்டிகளில் விளையாடி 18 விக்கெட்டுக்களை வீழ்த்தியுள்ளார்.
இந்திய கிரிக்கெட் முகாமைத்துவத்துடன் அந்நாட்டு தேர்வுக் குழுவினர் நடத்திய ஆலோசனைக்குப் பிறகு இந்த முடிவு எடுக்கப்பட்டுள்ளதாக பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இதேவேளை, தற்போது நடைபெற்று வருகின்ற ஐ.பி.எல் தொடரில் பிரகாசித்து வருகின்ற அவேஷ் கான், உம்ரான் மாலிக், ஹர்ஷல் பட்டேல், லுக்மான் மேரிவாலா, வெங்கடேஷ் ஐயர், கரண் ஷர்மா, ஷபாஸ் அஹமட் மற்றும் கிருஷ்ணப்பா கௌதம் என 8 வீரர்கள் இந்திய அணியின் கொவிட்- 19 கட்டுப்பாட்டு வலயத்தில் இருப்பார்கள் என பி.சி.சி.ஐ தெரிவித்துள்ளது.
இவர்கள் டி- 20 உலகக் கிண்ணத்துக்கு தயாராகும் இந்திய அணி வீரர்களுக்கு உதவுவார்கள் என தெரிவிக்கப்பட்டுள்ளது.