July 7, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி- 20 உலகக் கிண்ணம்: முதல் பயிற்சிப் போட்டியில் பங்களாதேஷை வீழ்த்தியது இலங்கை

Photo: Sri Lanka cricket Media

டி- 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக பங்களாதேஷ் அணியுடன்  நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் 4 விக்கெட் வித்தியாசத்தில் இலங்கை அணி அபார வெற்றி பெற்றது.

டி- 20 உலகக் கிண்ண கிரிக்கெட் தொடர் இம்மாதம் 17 ஆம் திகதி ஐக்கிய அரபு இராச்சியம் மற்றும் ஓமானில் ஆரம்பமாகவுள்ளது.

இந்த நிலையில், உலகக் கிணண்த்துக்கு முன்னோடியாக நடைபெறுகின்ற பயிற்சிப் போட்டிகள் ஆரம்பமாகியது.

இதில் இன்று (12) இரவு அபுதாபியில் நடைபெற்ற பயிற்சிப் போட்டியில் இலங்கை மற்றும் பங்களாதேஷ் அணிகள் மோதின.

இந்தப் போட்டியின் நாணய சுழற்சியில் வென்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதன்படி, முதலில் துடுப்பெடுத்தாடிய பங்களாதேஷ் அணி, 20 ஓவர்கள் நிறைவில் 7 விக்கெட்டுக்கள் இழப்பிற்கு 147 ஓட்டங்களை எடுத்தது. அந்த அணி சார்பில் சவும்ய சர்கார் 34 ஓட்டங்களை அதிகபட்சமாக பெற்றுக் கொண்டார்.

இலங்கை அணி சார்பாக பந்து வீச்சில் துஷ்மந்த சமீர 3 விக்கெட்டுக்களையும்,  லஹிரு குமார மற்றும் வனிந்து ஹஸரங்க ஆகிய இருவரும் தலா ஒரு விக்கெட் வீதமும் வீழ்த்தினர்.

இதனையடுத்து 148 ஓட்டங்களை நோக்கி பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய இலங்கை அணி வீரர்கள் ஆரம்ப முதல் தடுமாற்றத்தை சந்தித்தனர். ஒரு கட்டத்தில் போட்டியின் 12 ஆவது ஓவரில் 6 விக்கெட் இழப்பிற்கு 79 ஓட்டங்களை எடுத்து இக்கட்டான நிலைக்கு தள்ளப்பட்டது.

எனினும், 7 ஆவது விக்கெட்டுக்காக அவிஷ்க பெர்னாண்டோ மற்றும் சாமிக்க கருணாரத்ன ஜோடி பிரிக்கப்படாத 73 ஓட்டங்களை இணைப்பாட்டமாக பெற்று இலங்கை அணியை வெற்றிப் பாதைக்கு அழைத்துச் சென்றனர்.

இதன்படி, இலங்கை அணி 19.5 ஓவர்களில் 6 விக்கெட் இழப்பிற்கு 149 ஓட்டங்களை எடுத்து 4 விக்கெட்டுகளால் வெற்றி பெற்றது.

இலங்கை சார்பில் அபார ஆட்டத்தை வெளிப்படுத்திய அவிஷ்க பெர்னாண்டோ 58 ஓட்டங்களையும், சாமிக்க கருணாரத்ன 29 ஓட்டங்களையும் ஆட்டமிழக்காது பெற்றுக் கொண்டனர்.

இதேவேளை, இலங்கை அணி, தமது இரண்டாவது பயிற்சிப் போட்டியில் பப்புவா நியூகினியா அணியை 15 ஆம் திகதி சந்திக்கவுள்ளது.