November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

டி-20 உலகக் கிண்ணத்துக்கான பரிசுத் தொகை விபரம் அறிவிப்பு

ஐக்கிய அரபு இராச்சியத்தில் இம்மாதம் ஆரம்பமாகவுள்ள டி-20 உலகக் கிண்ணத்தில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கான பரிசுத்தொகையை சர்வதேச கிரிக்கெட் பேரவை வெளியிட்டுள்ளது.

ஐக்கிய அரபு இராச்சியம், ஓமானில் எதிர்வரும் 17 ஆம் திகதி முதல் நவம்பர் 14 ஆம் திகதி வரை டி- 20 உலகக் கிண்ணப் போட்டிகள் நடைபெறுகின்றன.

இதில் 16 அணிகள் போட்டியிடுகின்றன. இந்த போட்டியின் மொத்தப் பரிசுத் தொகையாக 56 இலட்சம் டொலர்களை (ரூ. 111 கோடி) பகிரப்படவுள்ளதாக ஐ.சி.சி தெரிவித்தது.

இதில் சம்பியன் பட்டம் வெல்லும் அணிக்கு 16 இலட்சம் டொலர்கள் (ரூ.32 கோடி) பரிசாகவும், 2 ஆவது இடத்தை  பிடிக்கும் அணிக்கு 8 இலட்சம் டொலர்கள் (ரூ.15 கோடி) பரிசாக வழங்கப்படும் என ஐ.சி.சி தெரிவித்துள்ளது.

அத்துடன், நவம்பர் 10 மற்றும் 11 ஆம் திகதிகளில் நடைபெறும் அரை இறுதியில் தோல்வி அடையும் இரு அணிகளுக்கும் தலா 4 இலட்சம் டொலர்கள் (ரூ.7 கோடி) பரிசு வழங்கப்படும்.

அரையிறுதிக்குள் செல்லாமல் தோல்வி அடைந்த 8 அணிகளுக்கு தலா 70 ஆயிரம் டொலர்கள் பரிசுத் தொகையும், முதல் சுற்றோடு வெளியேறும் அணிகளுக்கு தலா 40 ஆயிரம் டொலர்கள் பரிசாக வழங்கப்படும்.

அத்துடன், கடந்த 2016 ஆம் ஆண்டை போல் சுப்பர் 12 சுற்றில் வெல்லும் ஒவ்வொரு அணிக்கும் போனஸ் தொகையும் வழங்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது.

இம்முறை டி- 20 உலகக் கிண்ணத்தின் முதல் சுற்றில் பங்களாதேஷ், அயர்லாந்து, நமீபியா, நெதர்லாந்து, ஓமான், பப்புவா நியூகினி, ஸ்கொட்லாந்து, இலங்கை ஆகிய அணிகள் இரண்டு குழுக்களில் விளையாடவுள்ளன.

அவுஸ்திரேலியா, ஆப்கானிஸ்தான், இங்கிலாந்து, இந்தியா, நியூசிலாந்து, பாகிஸ்தான், தென்னாபிரிக்கா, நடப்பு உலக சம்பியன் மேற்கிந்தியத் தீவுகள் ஆகிய 8 அணிகள் சுப்பர் 12 சுற்றில் விளையாட ஏற்கனவே தகுதி பெற்றுவிட்டன. இதன்படி, முதல் சுற்றிலிருந்து நான்கு அணிகள் சுப்பர் 12 சுற்றில் இணையும்.