November 22, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

தெற்காசிய கால்பந்து தொடர்: மாலைதீவிடம் போராடித் தோற்றது இலங்கை

Photo: Facebook/ Sri Lanka Football

மாலைதீவில் நடைபெற்றுவரும் 13 ஆவது தெற்காசிய கால்பந்து சம்மேளன சம்பியன்ஷிப்பில், தமது கடைசி லீக் போட்டியில் நடப்பு சம்பியனான மாலைதீவு அணியுடன் மோதிய இலங்கை அணி 1 – 0 என்ற கோல் அடிப்படையில் தோல்வி அடைந்து ஏமாற்றத்துடன் தொடரிலிருந்து வெளியேறியது.

இலங்கை அணி, தமது கடைசி லீக் போட்டியில் மாலைதீவுகள் அணியை நேற்று சந்தித்தது.

போட்டியின் நான்காவது நிமிடத்தில் மாலைதீவுகள் அணியின் தலைவர் அலி அஷ்பாக், முதல் கோலைப் போட்டு முன்னிலைப்படுத்தினார்.

இதனைத் தொடர்ந்து மாலைதீவுகள் அணி கோல் எண்ணிக்கையை அதிகரிப்பதற்கு கடுமையாக முயற்சித்தது.

அதேவேளை, அந்த முயற்சிகளைத் தடுத்த இலங்கை அணி சளைக்காமல் எதிர்த்தாடியது.

எனினும், இடைவேளையின் போது மாலைதீவுகள் அணி 1 – 0 என்ற கோல் கணக்கில் முன்னிலையில் இருந்தது.

இடைவேளையின் பின்னர் நடைபெற்ற இரண்டாவது பாதியில் இலங்கைக்கு கிடைத்த கோல் போடும் நான்கு வாய்ப்புகள் கோட்டை விடப்பட்டன.

அதேபோல, மாலைதீவுகள் அணியின் கோல் போடும் முயற்சிகயை இலங்கையின் பின்கள வீரர்கள் சிறந்த முறையில் தடுத்தனர்.

எனவே, இலங்கை வீரர்கள் இரண்டாம் பாதியில் மேற்கொண்ட அனைத்து முயற்சிகளும் வீணாக, மாலைதீவுகள் அணி 1-0 என வெற்றி பெற்று, தமது இரண்டாவது வெற்றியைப் பதிவு செய்தது.

அத்துடன், பங்களாதேஷ் மற்றும் நேபாளம் அணிகளுக்கு எதிரான போட்டியில் தோல்வியடைந்த இலங்கை அணி, இந்தியாவை சமப்படுத்தியிருந்தது.

எனவே, இம்முறை தெற்காசிய கால்பந்து தொடரில் எந்தவொரு வெற்றியையும் பெறாமல் முதல் அணியாக இலங்கை தொடரில் இருந்து வெளியேறியது.

இதேவேளை, இலங்கை – மாலைதீகள் அணிகள் மோதிய போட்டியை அந்நாட்டு ஜனாதிபதி இப்ராஹிம் மொஹம்மத் சொலிஹுடன் இலங்கை விளையாட்டுத்துறை அமைச்சர் நாமல் ராஜபக்‌ஷவும் பார்வையிட்டனர்.