July 5, 2024

Tamil Avani News

மெய்ப்பொருள் காண்பது அறிவு

ஓமானுடனான டி – 20 தொடரை கைப்பற்றியது இலங்கை

ஓமானுக்கு எதிராக நேற்று (9) இரவு நடைபெற்ற இரண்டாவதும், இறுதியுமான டி- 20 போட்டியில் 5 விக்கெட்டுகளால் இலகுவாக வெற்றி பெற்ற இலங்கை, 2 போட்டிகள் கொண்ட டி- 20 தொடரை 2 – 0 என்ற ஆட்டக் கணக்கில் கைப்பற்றியது.

டி- 20 உலகக் கிண்ணத்துக்கு முன்னோடியாக ஓமானுக்கு சுற்றுப்பயணம் மேற்கொண்டுள்ள இலங்கை அணி, இரண்டு போட்டிகளை கொண்ட டி- 20 தொடரில் விளையாடியது.

முன்னதாக கடந்த 7 ஆம் திகதி நடைபெற்ற முதல் டி- 20 போட்டியில் 19 ஓட்டங்களால் இலங்கை அணி வெற்றியீட்டியது.

இந்த நிலையில், இரு அணிகளுக்குமிடையிலான இரண்டாவது டி- 20 போட்டி நேற்று (9) நடைபெற்றது.

இந்தப் போட்டியில் நாணய சுழற்சியில் வெற்றி பெற்ற இலங்கை அணி முதலில் களத்தடுப்பை தேர்வு செய்தது.

இதற்கமைய, முதலில் துடுப்பெடுத்தாடிய ஓமான் அணி நிர்ணயிக்கப்பட்ட 20 ஓவர்கள் நிறைவில் 8 விக்கெட்டுக்களை இழந்து 159 ஓட்டங்களைப் பெற்றுக் கொண்டது. ஓமான் அணி சார்பில் அதிகப்படியாக ஆகிப் இல்யாஸ் 60 ஓட்டங்களை எடுத்தார்.

பந்து வீச்சில் இலங்கை அணியின் சாமிக்க கருணாரத்ன, லஹிரு குமார தலா 2 விக்கெட்டுகள் வீதம் கைப்பற்றினர்.

பின்னர் போட்டியின் வெற்றி இலக்காக நிர்ணயம் செய்யப்பட்ட 160 ஓட்டங்களை அடைவதற்கு பதிலுக்கு துடுப்பாடிய இலங்கை கிரிக்கெட் அணி, 17.3 ஓவர்கள் நிறைவில் 5 விக்கெட்டுகளை மாத்திரம் இழந்து 163 ஓட்டங்களை பெற்று போட்டியை வென்றது.

இலங்கை அணியின் துடுப்பாட்டத்தில் பானுக ராஜபக்‌ஷவும், சாமிக்க கருணாரத்னவும் ஆட்டமிழக்காது தலா 35 ஓட்டங்களை பெற்றனர்.

பந்து வீச்சில் ஓமான் அணியின் மொஹமட் நதீம் 22 ஓட்டங்களுக்கு 2 விக்கெட்டுகளை கைப்பற்றினர்.

இதன்படி, இரண்டு போட்டிகளைக் கொண்ட டி-20 தொடரை இலங்கை அணி கைப்பற்றியது.