
Photo: CSK/ Twitter
சென்னை சுப்பர் கிங்ஸ் அணியின் வேகப்பந்து வீச்சாளர் தீபக் சாஹர், மைதானத்திலேயே தனது காதலிக்கு மோதிரம் அணிவித்த காணொளி சமூகவலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.
துபாய் மைதானத்தில் வியாழக்கிழமை நடைபெற்ற ஐ.பி.எல் தொடரின் 53 ஆவது லீக் போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணியும், பஞ்சாப் கிங்ஸ் அணியும் மோதின.
பரபரப்பான இந்த போட்டியில் சென்னை சுப்பர் கிங்ஸ் அணி 134 ஓட்டங்களை மட்டுமே எடுத்தது, பதிலுக்கு துடுப்பெடுத்தாடிய பஞ்சாப் கிங்ஸ் அணி, கேஎல் ராகுலின் அதிரடி ஆட்டம் காரணமாக 13 ஓவர்களில் 4 விக்கெட்டுக்களை மாத்திரம் இழந்து 139 ஓட்டங்களை எடுத்து 6 விக்கெட் வித்தியாசத்தில் அபார வெற்றி பெற்றது
இறுதிவரை களத்தில் நின்ற கேஎல் ராகுல் 42 பந்துகளில் 98 ஓட்டங்கள் எடுத்து அணியை வெற்றிக்கு அழைத்து சென்றார்.
இந்தநிலையில், நேற்றைய போட்டி முடிந்த பிறகு பார்வையாளர்கள் அமர்ந்திருந்த இடத்திற்கு சென்ற தீபக் சாஹர் அங்கிருந்த இளம் பெண்ணிடம் திடீரென மண்டியிட்டு காதலை வெளிப்படுத்தினார்.
அவர் கையில் வைத்திருந்த மோதிரத்தை கொடுக்க, அப்பெண்ணும் காதலை ஏற்று மோதிரத்தை அணிந்துக்கொண்டார். இதுகுறித்த காணொளி மற்றும் புகைப்படங்கள் இணையத்தில் வெளியாகி வைரலானது.
அவர்களுக்கு கிரிக்கெட் அரங்கிலேயே நிச்சயதார்த்தம் நடந்தது போன்று ரசிகர்கள் உற்சாகமடைந்தனர்.
அத்துடன், இந்த நிகழ்வுக்கு பிறகு சென்னை அணியின் ஓய்வறையிலும் கொண்டாட்டம் கலைக்கட்டியது. தீபக் சாஹருக்காக கேக் வெட்டி அந்த அணியினர் கொண்டாடினர்.
தீபக் சாஹர் காதலைத் தெரிவித்த பெண்ணின் பெயர் ஜெயா பரத்வாஜ் ஆகும். நீண்ட நாட்களாக நட்பாக பழகி வந்த இவர்கள் இருவரும் தற்போது காதலர்கள் மாறியுள்ளனர்.
டெல்லியைச் சேர்ந்தவரான ஜெயா பரத்வாஜ், அங்குள்ள தனியார் நிறுவனத்தில் பணிபுரிந்து வருகிறார். இவர் பிரபல பாலிவுட் மொடலான சித்தார்த் பரத்வாஜின் சகோதரி ஆவார். இதேபோல தீபக் சாஹரும், பிரபல பாலிவுட் நடிகையான மல்டி சாஹரின் சகோதரர் ஆகும்.